முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள கோவிலில் நேர்த்திக்கடன்!
கேரளாவில் உள்ள ஆணையடி நரசிசம்ம சுவாமி கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் நேர்த்தி கடன் செலுத்திய தொண்டர்கள்.
நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும், மேலும் வெற்றி பெற வாழ்த்தும் விதமாகவும், ஸ்டாலினின் ஆதரவாளர்கள் சிலர், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வழிப்படு நடத்தியுள்ளனர். ஆனையடி கிராமத்தில் உள்ள பழையிடம் நரசிம்ம சுவாமி கோயிலில் நரசிம்ம கடவுளுக்கு சிறப்புப் நேர்த்திகடனாக கருதப்படும் யானை ஊர்வலம் சமர்ப்பணம் செய்ய முன் பதிவு செய்துள்ளனர். இது வருடாந்திர கோயில் திருவிழாவிற்கு கிட்டத்தட்ட 80 யானைகள் அணிவகுத்துச் செல்லும் ‘கஜமேளா’க்கு பெயர் பெற்ற இந்த கோவிலில் வரும் ஜனவரி 31 அன்று நேர்த்தி கடன் நடைபெற உள்ளது.
மேலும் ஜனவரியில் 31 ல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் யானை ஊர்வலம் வரும் பக்தர்களின் பெயர்களில் ஆறாவது இடத்தில் ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ விழா அறிவிப்பு நோட்டீஸ் கோயில் கமிட்டியினர் வெளியிட்டதும் ஸ்டாலின் பெயரில் யானை ஊர்வலம் நடத்தப்பட உள்ள செய்தி கவனம் பெற்றது. நான்கு வாரங்களுக்கு முன்பு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரில் யானை ஊர்வலம் 6 வது பெயராக முன் பதிவு செய்ய கூறியதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். முதலில் இது கேலிக்கூத்தாக இருக்கும் என்று கோயில் நிர்வாகம் நினைத்த நிலையில், ஒரு வாரம் கழித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் கோவிலுக்கு வந்து யானை அணிவகுப்புக் கட்டணமாக ரூ.9,000 செலுத்தி, காணிக்கையை ஸ்டாலின் பெயரில் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து ஆறு என்ற எண் ஸ்டாலினுக்கு அதிர்ஷ்ட எண்ணாகவும் செல்வத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பியதால் அவர்கள் ஆறாவது இடத்தையும் ஸ்டாலின் பெயரில் பதிவு செய்தனர். கோவிட் காரணமாக கட்டுப்பாடுகள் உடன் நடைபெற்ற முந்தைய திருவிழாக்களை விட இந்த ஆண்டு 459 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ள கோவில் நோட்டீஸ் வைரலாகி வருகிறது. ஸ்டாலின் வருவாரா என பலரும் எங்களுக்கு போன் செய்துள்ளனர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த டயர் கடைத் தொழிலாளி எம்.ஜெயன் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அவரது சகோதரி ரதி பசுபதி ஆகியோர் ஆனையடியில் வசிக்கும் அவர்களின் அத்தை சுலதா சந்திரன் மூலம் நேர்த்தி கடன் முன் பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்குப் பிடித்த தலைவரின் வெற்றிக்காக இந்த நேர்த்தி கடன் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் இவர்களுக்கு மிகவும் பிடித்த தலைவர், அவரது உடல் நலம் வேண்டி பல வருடங்களாக பல்வேறு கோவில்களில் பல்வேறு நேர்த்தி கடன் இவர்கள் செய்து வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடு நேர்த்தி கடன் முன் பதிவு செய்து நடத்துவது இதுவே முதல் முறை. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை அணுக முயற்சித்தோம். ஆனால் இதுவரை சாதகமான பதில் வரவில்லை எனவும் நேர்த்தி கடன் நடத்தும் நபர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின் கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் துலாபாரம் நேர்ச்சை நடத்திய நிலையில் தற்போது கேரளாவில் உள்ள கோவிலில் மேலும் அவரது பெயரில் யானை ஊர்வலம் நடைபெற உள்ளது கேரளா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.