“தன் பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்கள் சேர்ந்து வாழ அனுமதி!” கேரள உயர் நீதிமன்றம் அதிரடி..
தன் பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், அவர்களை அவர்களது பெற்றோர்கள் பிரித்து வைத்ததால், “சம்மந்தப்பட்ட தன் பாலின ஈர்ப்பாள தம்பதியர் சேர்ந்து வாழலாம்” என்று, கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின் - பாத்திமா நூரா ஆகியோர் சவூதி அரேபியாவில் படித்து வந்தனர்.
அப்போது, படிக்கும் போதே அந்த இரு மாணவிகளும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி, நட்பு பாராட்டி வந்துனர்.
இதனையடுத்து, இவர்களது நட்பு நாளுக்கு நாள் நெருக்கமான நிலையில், இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் காதலிக்கத் ஆரம்பித்து உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்த இரு பெண்களும் தங்களது பட்டப் படிப்பை முடித்த பிறகு, அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தனர். ஆனால், இவர்களது இந்த தன் பாலின உறவுக்கு பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனாலும், அதனையும் மீறி அந்த இரு பெண்களும் ஒரே வீட்டில் தங்கி ஒன்றாக தன் பாலின ஈர்ப்பாளராக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த விசயமும், அந்த இரு பெண்களின் வீட்டிற்கும் தெரிய வந்திருக்கிறது.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இரு வீட்டார் பெற்றோர்களும், கடந்த 6 நாட்களுக்கு முன்பு, ஆதிலா உடன் ஒரே வீட்டில் தங்குவதற்காக பாத்திமாவை அவரது உறவினர்கள் சண்டை போட்டு, தங்களது வீட்டிற்கு இழுத்துச் சென்று இருக்கிறார்கள்.
இதனையடுத்து, தனது துணையான தன் பாத்திமா தனக்கு வேண்டும் என்று கோரி, கேரள உயர் நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்தார் ஆதிலா நஸ்ரின்.
அதன்படி, நீதிமன்றத்தில் ஆதிலா நஸ்ரின் தாக்கல் செய்த அந்த மனுவில், “எனது துணைவியார் பாத்திமா கடத்தப்பட்டு இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றும் குறிப்பிட்டு ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும், “நானும், தனது துணைவியார் பாத்திமா நூராவும் அவர்களது குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும்” ஆதிலா நஸ்ரின் தனது மனுவில் பதிவு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், “பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கேரள காவல் துறைக்கு” அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
முக்கியமாக, மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு ஒன்றையும் நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.
பின்னர், பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரின் இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, “அந்த இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை” என்று அறிவித்து, ஹேபியஸ் கார்பஸ் மனுவை முடித்து வைத்தது.
மிக முக்கியமாக, “பெற்றோரால் பிரிக்கப்பட்ட தன் பாலின ஈர்ப்பாள தம்பதியர் சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி” அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.