நபிகள் நாயகம் சர்ச்சை.. “பாஜக தலைவர்களை கண்டித்த” நித்தியின் கைலாசா நாடு! டிவிட்டரில் வைரல்...
“இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகம் பற்றி, சர்ச்சை குரிய வகையில் பேசிய பாஜக வைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு” நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாள நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.வி. விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் நாயகம் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்திருந்தார்.
இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இவை யாவும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தது.
பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியது.
இவற்றுடன், 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி, “இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்” என்று, ஐநாவுக்கு கோரிக்கை வைத்தது. இதனால், கடும் அதிரச்சி அடைந்த இந்தியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக, இந்திய - அரபு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் நட்புறவில் மிகப் பெரிய விரிசல் உருவாகும் சூழல் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக முக்கிய இஸ்லாமிய நாடுகளான ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்தியாவுக்குக் தங்களது பகிரங்கமான கண்டனத்தை தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் தான், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, “ஆழ்ந்த சமாதி நிலையிலிருந்து விரைவில் மீண்டு வருவேன்” என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் உருக்கமாக கூறியிருந்த நிலையில், நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் சர்ச்சை விவகாரத்தில், நித்தியானந்தா நேரடியான கண்டனம் தெரிவிக்காமல், கைலாசா நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் என கூறப்படும் டிவிட்டர் பக்கத்திலிருந்து பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான டிவிட்டர் பதிவில், “நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகளால் மோசமான கருத்துகளை வெளியிட்டமைக்கு, கைலாசா சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று, கூறப்பட்டு உள்ளது.
மேலும், “கைலாசாவுக்கான இந்திய தூதருக்கு வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது என்றும், அவரிடம் நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பேசியதற்கு கடும் கண்டனங்களை, இந்திய அதிகாரியிடம் தெரிவித்தோம்” என்றும், கூறப்பட்டு உள்ளது.
அதே போல், “சர்ச்சையாக பேசிய பாஜக வைச் சேர்ந்த இருவர் மீது, அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்ததை கைலாசா வரவேற்கிறது” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கைவிட்டுவிட்டு, இந்தியா ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிராக தூண்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என்றும், அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இந்த டிவிட்டர் கணக்கானது, கைலாசாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கா?” என்பது பற்றிய உறுதியாக எதுவுமு் தெரியவில்லை என்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, “அல் கொய்தா தற்கொலை படை தாக்குதலை நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததையடுத்து, நாட்டில் ஏதாவது நடந்தால் அதற்கு பாஜக தான் பொறுப்பு” என்று, சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.