24 மணிநேரத்தில் 122 பேருக்கு ஒமிக்ரான் தொற்று... இந்தியாவில் படிப்படியாக பாதிப்பு அதிகரிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் 122 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ், தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
எனினும் கடந்த 2-ந் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு பரவியதின் மூலம் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் நாட்டில் அடியெடுத்து வைத்தது.
கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என வேகமாக ஒமிக்ரான் வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.
ஒமிக்ரான் பாதித்தவர்களில் 114 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 122 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
17 மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 88 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது: “ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் வாரந்தோறும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஆசியாவில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
இந்தியாவில் தற்போது கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் அதிகளவில் உள்ள மாநிலங்களில் கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்தியாவின் 17 மாநிலங்களில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 114 பேர் குணமடைந்துள்ளனர். இரவு நேர ஊரடங்கு மற்றும் பெரிய கூட்டங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியே மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.
நாடு முழுவதும் தகுதி வாய்ந்தோரில் 89 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 61 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 18,10,083 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 4,94,314 ஆக்சிஜன் படுக்கைகள், 1,39,300 ஐ.சி.யு படுக்கைகள், 24,057 குழந்தைகளுக்கான ஐ.சி.யு படுக்கைகள் மற்றும் 64,796 குழந்தைகளுக்கான ஐ.சி.யு அல்லாத படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் குறிப்பிட்ட அளவிலான அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதாவது ஒமிக்ரான் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்புகள் ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாகிறது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கோவிட்-19, டெல்டா வைரஸ் போன்றவைக்கான சிகிச்சை நெறிமுறைகள் ஒமிக்ரானுக்கும் பொருந்தும்.
முதல் அலையில் இருந்து 2-வது அலை உருவாகியபோது ஆக்சிஜன் தேவை 10 மடங்கு அதிகரித்தது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.