பிரசவத்திற்கு லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்கள்- போராட்டத்தில் மக்கள்!
ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவத்திற்காக பொதட்டூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். ஆஸ்பத்திரியில் இருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பிரசவம் பார்ப்பதற்கு ரூ 2,000 லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என இளம்பெண் கூறியுள்ளார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அங்குள்ள செவிலியர்கள் இளம்பெண்ணிற்கும், குழந்தைக்கும் எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது குறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலை கேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் சென்று இளம் பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதற்கான சான்று தருமாறு கேட்டனர்
மேலும் அதற்கு அவர்கள் மழுப்பலாக பதில் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டேவிட் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம்பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் ரூ 2,000 லஞ்சம் தராததால் இளம் பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதாக பொய் கூறியதாக ஒப்புக்கொண்டனர். இளம் பெண்ணிற்கு எய்ட்ஸ் இருப்பதாக பொய் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு உறுதி அளித்தனர்.
அதனையடுத்து இளம் பெண்ணின் கணவர் பொதட்டூர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்திற்கு ரூ 2,000 லஞ்சம் தராததால் இளம் பெண்ணிற்கு எய்ட்ஸ் இருப்பதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.