சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியல்: தமிழகம் 2வது இடம்!
மத்திய அரசு வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து இந்த தரவரிசை பட்டியலை தயாரித்திருக்கிறது. 2019-20 ஆண்டு கால கட்டத்தை கணக்கில் கொண்டு இந்த தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
மேலும் 23 காரணிகளைக் கொண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார நிலை மதிப்பீடு செய்யப்படுகிறது. நாட்டிலுள்ள பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் கேரளா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. தெலங்கானா 3-வது இடத்தையும், ஆந்திர பிரதேசம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உத்தரப்பிரதேசமும் அதற்கு முன்னதாக பீஹார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதேபோல் சிறிய மாநிலங்கள் பட்டியலி மிசோரமும், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகரும் முதலிடத்தில் உள்ளன. தலைநகர் டெல்லியும், ஜம்மு-காஷ்மீரும் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன. பட்டியலில் உள்ள 19 பெரிய மாநிலங்களில் முதல் 4 இடங்களை தென் மாநிலங்களே பிடித்துள்ளன.