கும்பமேளாவில் கொரோனா விதிமீறல்.. நிர்வாண சாதுக்கள் தலைவர் கவில்தேவ் பலி!
By Aruvi | Galatta | Apr 16, 2021, 06:11 pm
ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்ட நிர்வாண சாதுக்கள் தலைவர் கவில்தேவ் கொரோனாவுக்கு பலியான நிலையில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 220 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில், கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் விசேசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பலரும், அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால், கொரோனா வைரஸ் தொற்று அங்கு சற்று வேகம் எடுத்து உள்ளது.
ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நேரத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் குவிந்து உள்ளதால், அங்கு கொரோனா ருத்ரதாண்டவம் ஆடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்துக்களின் புனிதமான நாட்களில் ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஹரித்வாரை பொறுத்த வரையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா அங்கு மிகவும் கோலாகலமாகவும், விசேசமாகவும் கொண்டாடப்படும் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே, ஒவ்வொரு முறையும் கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, ஒரே நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரும் அளவில் பரவி வந்த நிலையில், எப்போதும் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறும் கும்பமேளா கொண்டாட்ட நிகழ்வுகள் அனைத்தும், இந்த முறை 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. ஆனாலும், இந்து மக்கள் பலரும் நாள்தோறும் ஹரித்வாருக்கு ஆயிரக்கணக்கில் தரிசனம் செய்ய திரண்டு வருகின்றனர்.
இதனால், கும்பமேளா தொடங்குவதற்கு முன்பே உத்தரகாண்ட் மாநில அரசால் பல்வேறு கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வருவதால், மாநில அரசால் விதிக்கப்பட்ட கொரோனா கால கட்டுப்பாடுகள், சரிவர கடைப்பிடிக்க முடியவில்லை என்ற புகார்களும் எழுந்து உள்ளன. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு, காற்றில் பறக்கவிடப்பட்டதைக் காண முடிகிறது. இதன் காரணமாக, புனித நகரமான ஹரித்வாரில் கொரோனா அலைகளை அதிக அளவில் காண முடிகிறது. அப்பகுதி மக்கள் பலரும் தற்போது கொரோனா பீதியில் இருக்கின்றனர்.
இதனால், ஹரித்வார் கும்பமேளாவில் பெரும் அளவில் கூட்டம் கூடியதால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டதட்ட 2 ஆயிரத்து 220 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த கும்பமேளாவில் கலந்துகொண்ட நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் 65 வயதான கபில் தேவ் தாஸ், கொரோனாவால்
பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனால், கும்பமேளாவில் கலந்துகொண்ட சக சாதுக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தகவல், பெரும்பாலன பக்தர்களுக்கு தற்போது தெரிய வந்த நிலையில், கும்பமேளாவை விட்டு சாதுக்கள் பலரும், தற்போது வெளியேறி வருவதாகவும்
கூறப்படுகிறது.
பெரும்பான்மையாக உள்ள ஜூனா அகாடா சாதுக்கள், கும்பமேளாவைவிட்டு வெளியேறி விட்டதால், மற்ற சாதுக்கள் அமைப்பான நிரஞ்சனி அகாடாவும் தற்போது அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளனர்.
முக்கியமாக, ஹரித்வார் நகரில் கொரோனாவையும் பொருட்படுத்தாத கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு இதை விட இன்னும் மோசமான ஆபத்துகளும், நோய் தொற்று அபாயமும் ஏற்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கும்பமேளாவிற்கு செல்லும் பக்தர்கள் மிகுந்து எச்சரிக்கையுடன் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.