குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரோடு மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு கடந்த 8-ம் தேதி நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து காலை 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்தபோது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் வீரர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் குரூப் கேப்டன் வருண் சிங் ஆகியோர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த கோர விபத்து உலக நாடுகளை அதிர்க்குள்ளாக்கியது. விபத்தில் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண் சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு குரூப் கேப்டன் வருண் சிங் மாற்றப்பட்டார்.
கவலைக்கிடமானநிலையில் பெங்களூரு கமாண்டோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குரூப் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்றும் நோக்கில் மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குணமடைந்து வருவதற்கான இந்தப் பாதையில் இந்தியா உங்களுடன் துணை நிற்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக விமானப் படை அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வருண்சிங் உயிர் பிழைத்திருந்தால் விபத்து குறித்த முப்படைகளின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில், இந்த மரணம் தற்போது விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் ஒருவர் கூட தப்பிக்கவில்லை என்ற செய்தி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் இன்று காலை காலமானார். இதனை ஆழ்ந்த வருத்தத்துடன் விமானப்படை தெரிவித்துக் கொள்கிறது” இவ்வாறு தெரிவித்துள்ளது.