கர்ப்பிணிகளே உஷார்.. “கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம்” ஆய்வில் அதிர்ச்சி
“கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு, குறை பிரசவத்துக்கு அதிக வாய்ப்புகள்” உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக, பல உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், உலகின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது.
அதன் படி, தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 20.47 கோடியைத் தாண்டி இருக்கிறது.
இதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 3,20,33,333 பேருக்கு பரவி இருக்கிறது. அத்துடன், இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,183 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,12,10,624 ஆகவும் உள்ளது.
இந்த நிலையில் தான், கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள பிரிவினராக தற்போது கர்ப்பிணிகள் கருதப்படுகின்றனர்.
அப்படி, கொரோனா தொற்றுக்கு ஆளாகும் கர்ப்பிணி பெண்களுக்கு, வைரசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு ஒன்றை நடத்தினர்.
அந்த ஆய்வில், பல அதிர்ச்சிகரமான முடிவுகளை விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்து உள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவின் படி, “கர்ப்ப காலத்தின் ஒரு கட்டத்தில் தொற்றுக்கு ஆளாகும் கர்ப்பிணி பெண்களுக்கு முன் கூட்டிய பிறப்பு அல்லது குறை பிரசவத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பது” தற்போது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில், “கருவுற்ற பெண்கள் 32 வாரங்களுக்குள் பிரசவம் ஏற்படும் ஆபத்து, கிட்டதட்ட 60 சதவீதம் அளவிற்கு அதிகமாக இருப்பது” ஆய்வின் முடிவில் தெரிய வந்திக்கிறது.
அது போல், “குறை பிரசவம் அல்லது 37 வாரங்களுக்குள் குழந்தை பிறக்கும் ஆபத்து கிட்டதட்ட 40 சதவீதம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும்” ஆய்வின் முடிவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
குறிப்பாக, “உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த குறை பிரசவ ஆபத்து 160 சதவீதமாக இருந்ததும்” இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
இதனால், “கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கர்ப்பிணிகளைப் பாதுகாக்க வேண்டும்” என்றும், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.