இந்தியாவில் 88 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கொரோனாவே காரணம் என கருதப்படுகிறது.

"இங்கிலாந்தில் கொரோனா பரவும் அளவைப் பார்க்கையில் இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால் நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும்" என சில தினங்களுக்கு முன்னர் நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கம் அளித்தார். 

அப்போது பேசிய அவர், “நாடு முழுவதும் தகுதியுடைய 88 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுவிட்டது. 58 சதவிகிதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு விட்டது. 

corona vaccine

மாநிலங்களில் தற்போது 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளது. தற்போது மாதத்திற்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அது அடுத்த 2 மாதங்களில் 45 கோடியை எட்டும்.

தற்போது வரை இந்தியாவில் 161 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை தினமும் வல்லுனர்கள் மூலம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. 

முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலையின் அனுபவத்தின் மூலம் அடுத்த கொரோனா மாறுபாட்டின் போது பிரச்சினைகளை சந்திக்கக்கூடாது என்பதற்காக முக்கியமான மருந்துகளை சேகரித்து வைத்துள்ளோம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரை 138 கோடியே 2 லட்சத்து 23 ஆயிரத்து 188 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 82 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 55 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 319 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ஒமிக்ரான் திரிபு வைரசால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்கு அனுப்பட்டிருக்கிறது.

இதேபோல் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 பேர் குணமடைந்துவிட்டதாகவும், எஞ்சியவர்கள் சிகிச்சையில் இருப்பதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

vaccine

ராஜஸ்தானில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடாகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. 

கேராளாவில் 4 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 19 பேரும், தெலுங்கானாவில் 20 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணும் பணியை அனைத்து மாநில அரசுகளும் முடுக்கிவிட்டுள்ளன. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது இப்போதைக்கு சவாலாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருப்பதுடன், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.