சென்னையில் பட்ட பகலில் நடுரோட்டில் பைனான்சியர் ஓட ஓட வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, நெஞ்சை பதை பதைக்க வைத்து உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, குற்றங்கள் எல்லாம் பெரும்பாலும் குறைந்து, சற்று ஓய்வு எடுத்திருந்தது.
இப்படியான நேரத்தில் தான், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பைனான்சியர் ஒருவர் பட்ட பகல் வேளையில் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது, சென்னை சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்த 36 வயதான ஆறுமுகம் என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், அந்த பகுதியில் பைனான்சியர் தொழில் செய்து வந்திருக்கிறார்.
இப்படியான சூழலில் தான், நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு பைனான்சியர் ஆறுமுகம், தனது நண்பர் ரமேஷ் உடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, பைனான்சியர் ஆறுமுகம், அமைந்தகரை அடுத்து உள்ள செனாய் நகர் அருகே வந்துக்கொண்டிருந்த போது, அப்போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பைனான்சியர் ஆறுமுகத்தை வழி மறித்து, பயங்கர ஆயுதங்களைக்கொண்டு தாக்கி உள்ளனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பைனான்சியர் ஆறுமுகம், உயிர் பயத்தில் தனது வண்டியை அங்கேயே போட்டுவிட்டு, அந்த கொலைகார கும்பலிடம் இருந்து தப்பித்து அங்குள்ள நடுரோட்டில் ஓடி உள்ளார்.
ஆனாலும், அந்த வெறிப்பிடித்த கொலைக்கார கும்பல், பட்ட பகலில் அந்த நடு ரோட்டில் அந்த பைனான்சியரை ஓட ஓட துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில், அவரால் ஓட முடியாமல் அங்கேயே சரிந்து விழந்து விடவே, அடங்காத அந்த கொலைக்கார கும்பல், அந்த நபர் மீது துளியும் இறக்கம் காட்டாமல், அந்த நபரை தொடர்ந்து சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில், துடி துடித்துக்கொண்டிருந்த பைனான்சியர் ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கொலைக்கார கும்பல், அவர்கள் வந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த படுகொலை காட்சிகளை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள், அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ஆறுமுகத்தை மீட்ட பொது மக்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக” கூறி உள்ளனர்.
இந்த கொலை குறித்த தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா?” என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பைனான்சியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை தொடர்பாக முன்னதாக 2 பேர் வந்து சரணடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.