தகாத முறையில் நடக்க முயன்ற சக வீரர்.. நான்கு உயர் அதிகாரிகள் மீது பாய்ந்தது எப்.ஐ.ஆர்!
ராஜஸ்தானில் ராணுவ வீரரின் மனைவியிடம் குளியல் அறையில் தகாத முறையில் சக வீரர் நடக்க முயன்ற வழக்கில் 4 உயரதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.
ராஜஸ்தானின் ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பில் வசித்து வரும் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் போலீசில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த சில நாட்களுக்கு முன் மாலையில், வீரரின் மனைவி வீட்டில் குளித்து கொண்டிருந்தபோது, ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.
மேலும் இதனால், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். இதில், வீட்டில் இருந்த அவரது கணவர் பதறியடித்து ஓடி வந்துள்ளார். இருவரும், அந்த உயரதிகாரியை பிடிக்க முயன்றுள்ளனர். எனினும், அவர் தப்பியோடி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை காவல் நிலைய அதிகாரி பரத் ராவத் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து ராவத் கூறும்போது, அந்த தம்பதி உடனடியாக நடந்த சம்பவம் பற்றி ராணுவ உயரதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். அவர்கள், இந்த விசயம் வெளியே தெரியாமல் இருப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதுடன், தம்பதியை மிரட்டி உள்ளனர். அவர்களை வெளியே வரவிடாமல் வீட்டிலேயே முடக்கி உள்ளனர் என புகாரில் உள்ளது.
அதனை தொடர்ந்து, 4 உயரதிகாரிகளின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். அந்த பெண், தங்களுக்கு ஏதேனும் நடந்தால், 5 பேரே பொறுப்பு என புகாரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றி பாதுகாப்பு துறை செய்தி தொடர்பு அதிகாரி அமிதாப் சர்மா கூறும்போது, ஜோத்பூர் ராணுவ நிலையத்தில் தங்கியுள்ள, ராணுவ வீரரின் மனைவி, பணியில் உள்ள மற்றொரு வீரர் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவில் கூறியுள்ள, கடுமையான குற்றச்சாட்டுகள் மீது இந்திய ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.