கடும் குளிர் பனிக்கு இடையே கண்களில் ஈரத்தோடு 20 வது நாளாக போராடும் விவசாயிகள்! ஈரமில்லாமல் வேடிக்கை மட்டும் பார்க்கும் மத்திய அரசு!
By Aruvi | Galatta | Dec 15, 2020, 04:09 pm
கடும் குளிர் பனிக்கு இடையே கண்களில் ஈரத்தோடு 20 வது நாளாக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு துளியும் ஈரமில்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் குவிந்துள்ள விவசாயிகள் நேற்று 9 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் இன்றுடன் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பொது மக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெறுகி வருகிறது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
மேலும், “விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக” அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், “அந்த போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு” அளித்துள்ளதாகக் கூறி உள்ளார். “அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா” என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “ வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் அளிக்க ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும்” என்றும், கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் புரட்சியில், “அதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிக்க முடிவு” செய்துள்ளதாகவும், விவசாயிகள் அறிவித்து, அது சார்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழங்களையும் எழுப்பி வந்தனர்.
இன்றுடன் விவசாயிகள் போராட்டம் 20 வது நாளாக தொடரும் நிலையில், கடும் குளிர் மற்றும் பனிக்கு இடையே கண்களில் ஈரத்தோடு விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு துளியும் ஈரமில்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வருவதாகவும், பல்வேறு தரப்பினரும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இவையெல்லாம், அடுத்து வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது.