“டெல்லிக்கே காப்புகட்டியாச்சு அண்ணாத்த!” திடீரென மூடப்பட்ட பள்ளிகள்..!
உச்சக்கட்ட காற்று மாசு எதிரொலியால், டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூட அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஒரு பக்கம் சுற்றுச்சூழல் மாறி வருகிறது.
இன்னொரு பக்கம், இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில் காற்றின் தரம் முற்றிலுமாக மாசடைந்து, மிக மோசமான அளவில் பரவி வருகிறது.
அந்த வகையில், தலைநகர் டெல்லியில் இது வரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமான அளவை எட்டி உள்ளது.
அதன்படி, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் தேவையற்ற கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதாலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும், வாகன நெரிசலால் ஏற்படும் காற்றின் தரம் மிகவும் மோசமான அபாயக்கட்டத்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், டெல்லியில் அதிக அளவிலான காற்று மாசு இருப்பதால் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அரசுக்கு அதிரடியாக உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து, இந்த காற்று மாசு தொடர்பாக தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வந்த டெல்லி அரசு, “டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும்” அதிரடியாக உத்தரவிட்டுள்ள டெல்லி அரசு, “முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும்” கூறியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், “டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு உள்ளன.
நேற்று இரவு வெளியிடப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி நச்சுப் புகை மூட்டத்தால் நகரம் பல நாட்களாக போராடி வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களில் பாதி பேரை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்குமாறும்” அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, டெல்லியில் காற்று தர குறியீடு இன்று 379 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், “ஹரியானாவின் ஜிந்த் மற்றும் மானேசர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நேற்றைய தினம் 16 ஆம் தேதி மிக மோசமான அளவில் காற்றின் தரம் பதிவாகி உள்ளதாக” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இவற்றுடன், வட இந்திய நகரங்களில் குளிர்காலம் தொடங்கியதில் இருந்து வாகனப்புகை மற்றும் தொழிற்சாலை புகையின் காரணமாக காற்றின் தரம் மோசமாகவே பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.