ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் கடுமையான கட்டுப்பாடுகளால் சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தது.
 
இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் எனும் ஒமிக்ரான் 50 பிறழ்வு மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகப் பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

OMICRON INDIA CORONA VIRUS

உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்  என உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,   ஒமிக்ரான் வைரஸ் பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

''வெளிநாடுகளில் இருந்து வருவோர் கடந்த 14 நாட்களுக்கான பயண விவரம், நெகட்டிவ் பிசிஆர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசின் ஏர் சுவிதா போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையத்தில் வந்த பின் பிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும். 

அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தை விட்டு வெளியேறக் கூடாது.  பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தால், வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 8-வது நாளில் மீண்டும் ஒரு பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒருவேளை பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அரசின் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 

OMICRON CORONA VIRUS

மேலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தால், அவருடன் வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்துவரும் பயணிகள் விமான நிலையத்திலிருந்து சென்றபின் அடுத்த 14 நாட்களுக்குத் தங்கள் உடல்நிலையைக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பயணிகளிடம் ரேண்டமாகப் பரிசோதனையும் நடத்தப்படும்.

இந்த விதிமுறைகளில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விலக்கு அளிக்கப்படுவார்கள்.  ஒருவேளை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கும்போது கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்து, உரிய கொரோனா சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவருடன் அமர்ந்திருந்த சக பயணி, அந்த வரிசையில் அமர்ந்திருந்தோர் முன்வரிசையில் அமர்ந்தோர், பின்னால் வரிசையில் இருந்த 3 வரிசை அனைவரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். இவர்கள் வீட்டுக்குச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.