லிவ்விங் டூ கெதர் என்று அழைக்கப்படும் “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஏற்புடையது அல்ல” என்று, நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நீதிமன்றத்தில் சில நேரங்களில் சில வித்தியாசமான வழக்குகள் வருவதுண்டு. அந்த வழக்குகள் பெரும்பாலும், சமூகத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

அந்த வகையில், லிவ்விங் டூ கெதர் என்று அழைக்கப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குறித்த வழக்கு ஒன்றை, பஞ்சாப் உயர் நீதிமன்றம் விசாரித்து, தனது கருத்தினை தெரிவித்து உள்ளது.

அந்த வகையில், “திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் - பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு என்பது, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சற்றும் ஏற்புடையது அல்ல” என்று, பஞ்சாப் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

அதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான குல்ஸா குமாரி என்கிற இளம் பெண்ணும், 22 வயதான குர்விந்தர் சிங் என்ற இளைஞரும் சேர்ந்து, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில், தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் என்றும், எங்கள் காதலுக்கு என் காதலி குல்ஸா குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்” என்றும், குறிப்பிட்டு உள்ளனர். 

“இதனால், வீட்டைவிட்டு வெளியேறி தற்போது நானும், என் காதலியும் ஒன்றாகத் தங்கி, “லிவ்விங் டூ கெதர்” முறையில் வாழ்ந்து வருகிறோம்” என்றும், அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். 

அத்துடன், “நாங்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்ய இருக்கிறோம்” என்றும், அதில் கூறியுள்ளனர்.

எனினும், “என் காதலி குல்ஸா குமாரியின் ஆதார் அட்டை முதலான முக்கிய ஆவணங்கள் அவரது பெற்றோரின் வீட்டில் இருக்கிறது என்றும், இதனால் எங்கள் திருமணத்திற்குத் தாமதம் ஏற்படுகிறது என்றும், அது வரையில், ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், அவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹெச்.எஸ்.மதன், “திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் - பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூகரீதியாகவும் ஏற்புடையது அல்ல” என்று, அதிரடியாகக் கூறினார்.

மேலும், “லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை முறைகெல்லாம், பாதுகாப்பு வழங்க முடியாது” என்றும், அதிரடியாகக் கூறிய நீதிபதி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, இந்த லிவ்விங் டூ கெதர் வழக்கு, பஞ்சாப் மாநிலத்தில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. இந்த வழக்கு பற்றிய செய்திகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.