6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி... சீரம் நிறுவனம் தகவல்!
இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன.
கொரோனா வைரஸ் தொற்றாலும், பொதுமுடக்கத்தாலும் உலக நாடுகள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. கொரோனா பரவலால் பல லட்சம் மக்கள் தங்கள் உயிர்களை தற்போதும் இழந்தும் வருகின்றனர்.
ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என கொரோனா உருமாற்றத்தால் கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என உருவாகி மக்களை இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் கொரோனா வைரஸ் இன்னல்களை உருவாக்கி வருகிறது.
கொரோனா தடுப்பூசிகளால் சற்று தணிந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது பல பிறழ்வுகளை கொண்ட ஒமிக்ரான் கொரோனா திரிபு கொணடதாக தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒமிக்ரான் திரிபு டெல்டாவை விட அதிவேகத்தில் பரவும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஒமிக்ரான் பரவியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது பல்வேறு மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 44 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வயது வந்தோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட் கோவிஷீல்டு, கோவேக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் 12 வயதுக்கு கீழான சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்' மற்றும் சைடஸ் கடிலா நிறுவனத்தின் 'சைகோவ் - டி' ஆகிய நிறுவனங்கள் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனையை ஏற்கனவே துவங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி (கோவோவேக்ஸ் – Covovax) தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அடர் பூனவல்லா தெரிவித்தார்.
12 - 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள சீரம் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.