விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம்! 8 பேருந்துகள் சேதம்..
விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதை கண்டித்து மராட்டியத்தில் இன்று நடந்து வரும் முழு அடைப்பு போராட்டத்தினால் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலையில், 8 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூரி கேரி மாவட்டத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதில் 4 பேர் உட்பட அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் மொத்தம் 9 பேர் வரை உயிர் இழந்தனர்.
இப்படியாக, விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட இந்த சபம்வம் வீடியோவாக வெளியாகி, நாடு முழுவதும் கடும் கண்டனங்களையும், பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, மராட்டியத்தில் இன்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் இன்றைய தினம் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டது.
இந்த முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் 3 கட்சி செய்தி தொடர்பாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, “சிவசேனா முழு வீச்சில் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கு பெறும்” என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
அதே நேரத்தில், மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவற்றுடன், 3 கம்பெனி மாநில ரிசர்வ் போலீசார், 500 ஊர்காவல் படை வீரர்கள், உள்ளூர் ஆயுத படையை சேர்ந்த 400 போலீசார் கூடுதலாக நவராத்திரி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றுடன், கடைகளை மூடவும் ஆளுங்கட்சி வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, புனேயில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படும் என்றும், வியாபாரிகள் அறிவித்து உள்ளனர்.
அத்துடன், மும்பையில் பேருந்துர்கள் மற்றும் ரயில் போக்குவரத்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதனால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவே பெஸ்ட் பேருந்துகளின் கண்ணாடிகளில் கம்பி வலைகள் கட்டப்பட்டு இருந்தன.
இந்த முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
எனினும், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன போக்குவரத்து முடங்கியது. அங்கு பல பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனாலும், மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் மொத்தம் 8 பேருந்துகளின் அடித்து நொறுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.