“வரதட்சணையின் நன்மைகளும் - பயன்களும்” பாடப் புத்தகத்தில் சர்ச்சை..
பெண்கள் சார்பில் தரப்படும் வரதட்சணையின் சிறப்பை விவரிக்கும் வகையில், பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குறிய வகையில் இடம் பெற்றுள்ளது, இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவர்களின் பாடத் திட்டங்களில் சில முறை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் சர்ச்சைக்குறிய வகையில் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் 210 வது பக்கத்தில், “இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
அத்துடன், தமிழக பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருந்ததற்கு மிகப் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், புதிதாக இந்தி ஆட்சி மொழி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதும், அப்போது பெரிய அளவில் சர்ச்சைக்கள் வெடித்தது. பின்னர், கடும் எதிர்ப்புக்கள் இடையே மாற்றப்பட்டது.
அதே போல், “தமிழ் தொன்மையான மொழி இல்லை” என்பது தொடர்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் 142 வது பக்கத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பாடங்கள் இடம் பெற்று, பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் தான், இந்தியாவில் கல்லூரி பயிலும் மாணவர்களின் பாட புத்தகம் ஒன்றில், “வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள்” என்கிற பகுதி, தற்போது பாடமாக சேர்க்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, நர்சிங் பயிலும் மாணவிகளின் சமூகவியல் பாட புத்தகத்தில் தான், இப்படியான ஒரு பாட பகுதி இடம் பெற்று இருக்கிறது.
இது தொடர்பாக அபர்ணா என்ற சமூக ஆர்வலர், தனது டிவிட்டவர் பக்கத்தில், அந்த சர்ச்சைக்குறிய பாட புத்தகத்தை அப்படியே பகிர்ந்து உள்ளார்.
அத்துடன், இது குறித்து கருத்து கூறியுள்ள அபர்ணா, “இப்படியான ஒரு பாடம் மாணவர்களுக்கு கண்டிப்பாக கற்பிக்கப்படக் கூடாது” என்றும், தனது கருத்தை முன் வைத்து உள்ளார்.
குறிப்பாக, “வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள்” என்ற அந்த பாடத்தை எழுதிய ஆசிரியர் டி.கே. இந்திராணி ஆவார். இந்த பாடப்புத்தகமானது, இந்திய நர்சிங் கவுன்சில் பாடத் திட்டத்தின்படி நர்சிங் பயிலும் மாணவர்களுக்கானது என்றும், அதில் சுட்டிக்காட்டு இருக்கிறது.
முக்கியமாக, இந்த பாடபுத்தகத்தின் ஒரு பக்கத்தில், “வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள்” என்று குறிப்பிடப்பட்டு, அது தொடர்பான விளக்கங்களும் இவ்வாறாக இடம் பெற்று இருக்கிறது.
அதன் படி, “வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள் என்று பார்க்கும் போது, முதல் பயனாக.. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாகனங்கள் போன்ற வீட்டு உபயோக உபகரணங்களுடன் திருமணமான உடன் ஒரு புதிய குடும்பத்தை நிறுவுவதற்கு, வரதட்சணை உதவியாக இருக்கும்” என்று, அதன் ஆசிரியர் அந்த பாடத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்துடன், “பெண் குழந்தைகளை அதிகம் படிக்க வைத்தால், வரதட்சணை குறைவாக கொடுத்தால் போதும் என்று நினைத்து, பல பெற்றோர்கள் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கின்றனர்” என்றும், அதன் ஆசிரியர் அந்த பாடத்தில் கூறியுள்ளார்.
மேலும், “வரதட்சணை அதிகமாக கொடுத்தால், அசிங்கமாக தோற்றம் கொண்ட பெண்களை நல்ல இடத்தில் அல்லது அழகான ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்” என்றுமு், அந்த ஆசிரியர் மிகவும் சர்ச்சைக்குறிய வகையில் அதில் பாடமாக எழுதியிருக்கிறார்.
இந்த பாடத்திட்டம் தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.