தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ - மாணவிகள் எழுதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளைய தினம் தொடங்குகிறது.
கொரோனா என்னும் பெருந்தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இவற்றுடன், ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும், கடந்த 2 ஆண்டுகளாக தேர்ச்சி செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டது.
பின்னர், கொரோனா பெருந் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும், தொடர்ந்து மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் தான், 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டதால், மாணவர்கள் தேர்வை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் அப்படியே குறைக்கப்பட்டன.
அத்துடன், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில், “நடப்பாண்டில் ஆண்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த வேண்டும்” என்பதில், பள்ளி கல்வித் துறை திட்டவட்டமாக அறிவித்தது.
அதன்படி, தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் நடந்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளைய தினம் தொடங்குகிறது.
பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை தொடங்கும் நிலையில், வரும் 28 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
அதே போல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறு நாள் 6 ஆம் தேதி தொடங்கி, வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும், பிளஸ் 1 தேர்வானது வரும் 10 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வானது சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர்.
அதன் படி, இந்த தேர்வை மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் எழுதுகிறார்கள்.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மொத்தமாக 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுதுகிறார்கள்.
“நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, மாணவர்கள் காலை 8 மணிக்கு பதிலாக, 9 மணிக்கு வந்தால் போதும்” என்று, அரசு தேர்வுத் துறை கூறியுள்ளது.
முக்கியமாக, தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், “தேர்வு மையங்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டு” உள்ளது.
“இந்த பொது தேர்வின் போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால், அந்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த இரு பருவத் தேர்வுகள் எழுதவும் அதிரடியாக தடை” விதிக்கப்படுகிறது.
மிக முக்கியமாக, தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் உள்ள சக மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினாலோ, அல்லது பிறரின் உதவியோடு தேர்வு எழுதினாலோ, அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அடுத்த இரு பருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்” என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதே போல், “தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்தால், பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தர தடையும் விதிக்கப்படும்” என்றும், அதிரடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.