தன்பாலின திருமண விவகாரம்.. “ஆண் - பெண் இடையே நடப்பது மட்டும்தான் திருமணம்” மத்திய அரசு திட்டவட்டம்
“சட்டத்தின் அடிப்படையில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையே நடப்பது மட்டுமே திருமணம்” என்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது விளக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளது.
இந்தியா, வெளிநாடுகளுக்குப் போட்டியாக எல்லா விதங்களிலும் மாறி வருகிறது என்பதை யாரும் இங்கே மறுப்பதற்கு இல்லை. இந்த மாற்றங்கள் பாலியல் உறவில் குறிப்பாக, தன்பாலின உறவிலும் பல மாறுதல்களையும் மாற்றங்களையும் இந்தியா கண்டு வருகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
அதாவது, “இந்தியாவில் இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் வெளிநாட்டுத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கச் சேர்க்க கோரியும், தன்பாலின திருமணத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் உரிமையை அறிவிக்கக் கோரியும்” கிட்டதட்ட 5 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
“இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 வது பிரிவுகளின் கீழ், ஒரு நபரின் பாலினம் அல்லது பாலியல் நோக்கு நிலைகளைப் பொருட்படுத்தாமல், தன்பாலினம் அல்லது ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மக்களின் அடிப்படை உரிமை என்று அந்த மனுவில்” கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் பதிலளித்த இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “திருமணம் மற்றும் திருமணத்தைப் பதிவு செய்வது பற்றிய இந்த மனுக்கள் எழுப்பும் கேள்வியின் சமர்ப்பிப்பை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா, இது ஒரு உயிரியல் ஆணுக்கும் - உயிரியல் பெண்ணுக்கும் இடையில் இருக்க வேண்டுமா என்பதைப் பொறுத்துத் தான் எல்லாம் இருக்கும்” என்றும், சுட்டிக்காட்டியது.
அத்துடன், “இந்திய சட்டப்படி, ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையேயான திருமணத்தையே, சட்டம் அங்கீகரிக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இது தொடர்பான மனுக்களைத் தள்ளுபடி செய்யக் கோரி, மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட, “இந்தியாவில் திருமணம் என்பது பழக்க வழக்கங்கள், சடங்குகள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்கள் மற்றும் ஒன்றாக வாழ்வது அடிப்படையிலானது” மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது.
முக்கியமாக, “கணவன் - மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய இந்தியக் குடும்ப அமைப்புடன், ஒரே பாலின நபர்களின் பாலியல் உறவை ஒப்பிட முடியாது என்றும், உயிரியல் ஆண் - பெண் எனும் எதிர் பாலினத்தவருக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பதில் மட்டுமே தங்களுக்கு சட்டப்பூர்வமான விருப்பம் இருப்பதாகவும்” மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்திருந்தது.
மேலும், “ஐபிசி பிரிவு 377 இன் படி ஒரு பாலின உறவு என்பது குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்த தீர்ப்பின் மூலமாக ஒரே பாலின திருமணத்திற்கான அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது” என்றும், மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இப்படியாக, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு இறுதி விசாரணைக்கு ஒத்தி வைத்து உள்ளது. இதனால், தன்பாலின ஈர்பாளர்கள் சட்டத்தின் முடிவை எதிர்நோக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.