“கொரோனா 3 வது அலையை சமாளிக்க இந்தியாவிடம் என்ன திட்டம் உள்ளது?” வெள்ளை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கும் ராகுல்காந்தி
“கொரோனா 3 வது அலையை சமாளிக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?” என்று, கேள்வி எழுப்பியதோடு வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி எச்சரித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் முன்பு “மத்திய அரசின் கொரோனா நிர்வாகம் குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
முக்கியமாக, “கொரோனா 3 வது அலைக்கு மத்திய அரசு தயாராக வேண்டும்” என்றும், மத்திய அரசிற்கு ராகுல் காந்தி எச்சரிக்கையும் விடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2 ஆம் அலைகளின் மத்திய அரசின் நிர்வாகம் பேரழிவு என்பது, நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
அத்துடன், “இது ஏன் பேரழிவு தரக்கூடியது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன என்றும், அந்த காரணங்கள் அனைத்தும் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில்
வெளியிடப்பட்டு உள்ள இந்த வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்ட முயன்றுள்ளோம்” என்றும், அவர் கூறினார்.
குறிப்பாக, “இந்தியாவில் வரவிருக்கும் கொரோனாவின் 3 வது அலைக்கு எவ்வாறு நாம் செயல்படுவது? என்பது பற்றிய இது ஒரு வரைபடம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “தற்போதைய ஆட்சியில் தவறு நடந்ததைப் பற்றிய தகவல்களையும். நுண்ணறிவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குவதே எங்களது நோக்கம்” என்றும் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமானது. அரசாங்கத்தை நோக்கி விரல் காட்டுவது அல்ல என்றும், மாறாக கொரோனாவின் 3 வது அலை நோய்த் தொற்றுக்குத் தயாராவதற்குத் தேசத்திற்கு உதவுவதாகும்” என்றும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், “மத்திய அரசு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான மையத் தூண் தடுப்பூசியே“ என்றும், அவர் வலியுறுத்தினார்.
“நாம் விரைவில் 100 சதவீத தடுப்பூசி போடுவதைக் கடந்து செல்வது முக்கியம்” என்றும் சுட்டிக்காட்டிய பேசிய ராகுல் காந்தி, “நம்மிடம் ஒரு தடுப்பூசி உத்தி இருப்பது மிகவும் முக்கியம்” என்பதையும் வலியுறுத்தினார்.
“கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்றும். மருத்துவமனைகள், ஆக்ஸிஜன், மருந்துகள் தயாராக இருக்க வேண்டும்” என்றும், வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அதே போல், “கொரோனா, முதல் அலையைக் காட்டிலும் 2 வது அலை மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதைவிட 3 வது அலை இன்னும் மோசமாக இருக்கும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, “கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சரிக்குச் சமமாக நடத்த வேண்டும் என்றும், எந்தவிதமான சார்பு நிலையும் இருக்கக்கூடாது” என்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.