“இனி வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்” என்று, பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

“தங்கம்
விலை ஏறி மலையேறிப்போனது
ஏழை பெண்களுக்கு கனவும்,
சேதாரமானது திருமணம்!”

                                                    - அருள் வளன் அரசு

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும், இந்தியாவில் முன்னொரு காலத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்துக் கிளம்பிய வரதட்சணை கொடுமைகள் எல்லாம், தற்போது நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, கேரள மாநிலத்தில் சமீபகாலமாக வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. கேரளாவில் மீண்டும் அதிகரித்து வரும் வரதட்சணை கொடுமைகளால், அந்த மாநிலத்தில் புதிதாகத் திருமணம் ஆகும் இளம் பெண்கள் பலரும் வரிசையாகத் தற்கொலை செய்துகொள்வதும், அல்லது இயற்கை விதிகளுக்கு மாறாக அவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
 
இந்த சூழலில் தான், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோழிக்கோடு பல்கலைக்கழகம் “வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு” மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கி வருகிறது. 

முக்கியமாக, வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில், “இனி நான் வரதட்சணை வாங்கமாட்டேன், கொடுக்கவும் மாட்டேன்” என்று, மாணவர்களிடம் கையெழுத்து படிவம் பெற்றுக்கொண்ட பிறகே விண்ணப்ப படிவமானது வினியோகிக்கப்படுகிறது. 

மேலும், “வரதட்சணை இனி வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு தான், பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும்” என கோழிக்கோடு பல்கலைக்கழகம் புதிய விதி முறையை விதித்து உள்ளது. 

குறிப்பாக, “எதிர் காலத்தில் வரதட்சணை தொடர்பான புகார்கள் எழுந்தால், சம்மந்தப்பட்ட மாணவர்களின் பட்டம் உடனடியாக ரத்து செய்யப்படும்” என்றும்,  பல்கலைக்கழகம் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்து உள்ளது.

“கேரளத்தில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பல இளம் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக” ஆளுநர் ஆரிப் முகமது கான் தற்போது விளக்கம் அளித்து உள்ளது.