முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்கிறார்.
தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அப்போது அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதும் இன்னும் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை போலவே, இன்றைய தினமும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
அதன் படி, இன்று காலை 10 மணிக்கு மேல் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழக சட்டமன்றத்தில் இந்த முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த பட்ஜெட் பற்றி ஒவ்வொரு அறிவிப்பையும் அவர் அறிவிக்க உள்ளார்.
இதனால், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையானது சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, அதே நேரத்தில் இன்னும் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் பற்றியும், இன்றைய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாக இடம் பெறும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமாக, ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி இருப்பது போல, தனியாக மாதம் 2 முறை வெளியாகும் கல்வி பத்திரிகையும் தொடங்குவதற்கான அறிவிப்பும், இன்றைய தினம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இன்று தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் ,மகளிர் உரிமைத்தொகை, மாதந்தோறும் மின் கட்டணம் உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் இன்று அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், இன்றைய தினம் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போது, இந்த கூட்டத்தில் “வேளாண் பட்ஜெட்டை என்றைக்கு தாக்கல் செய்வது? பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது?” என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படவும் இருக்கிறது.
முக்கியமாக, “சனிக்கிமையான நாளைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் அதிகம் வாய்ப்பு இருக்கிறது” என்றும், கூறப்படுகிறது.
மேலும், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு, முதல் முறையாக சட்டசபை இன்று கூடு உள்ளது.
இன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பால் பொருட்கள் விலை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அதிமுக திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.