மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் அறிவித்த பாஜக நிர்வாகி கைது! உ.பியில் வீடு புகுந்து தூக்கிய மே.வ. போலீஸ்!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் தலைக்கு 11 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய உத்தரப் பிரதேச பாஜக நிர்வாகியை, மேற்கு வங்க போலீசார் நேற்றிரவு அவரது வீடு புகுந்து அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் வர்ஸ்னே என்ற பாஜக நிர்வாகி தான், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையைக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசாக அளிப்பேன்” என்று கூறியவர்.
அதாவது, மேற்குவங்க மாநிலம் வீர்பூமி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி ஊர்வலம் ஒன்று நடந்தது.
அந்த ஊர்வலத்தின் போது, குறிப்பிட்ட இரு அமைப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது, அந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த முயன்ற அந்த மாநில போலீசார், லத்தி சார்ஜ் செய்து வன்முறையை அடக்க முயன்றனர்.
அப்போது, போலீசாரின் இந்த தாக்குதலில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த பாஜக நிர்வாகியான யோகேஷ் வர்ஷினி படு காயம் அடைந்தார்.
அப்போது அவர், “முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையைக் கொண்டு வருவோருக்கு 11 லட்சம் வெகுமதி அளிக்கப்படும்” என்று, சர்ச்சைக்குரிய வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இவரது பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தான், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் தலைக்கு 11 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய உத்தரப் பிரதேச பாஜக நிர்வாகியின் இந்த அடாவடி பேச்சு, நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.
இந்j நிலையில், மேற்கு வங்க போலீசார் நேற்றிரவு உத்தரப் பிரதேசம் சென்ற நிலையில், அங்கு அலிகார் அடுத்த காந்தி நகரில் உள்ள பாஜக நிர்வாகி யோகேஷ் வர்ஷினியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, அவரை கைது செய்தனர்.
அந்த நேரத்தில் பாஜக நிர்வாகியைக் கைது செய்த போலீசார் சீருடையில் இல்லாமல் இருந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள், போலீசார் குறித்து விசாரித்த போது அங்கு கூடிய மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அடுத்த சிறிது நேரத்தில் மேற்கு வங்க போலீசாருக்கும், அந்த குடும்பத்தினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு, அந்த வீட்டின் மாடியில் தங்கியிருந்த யோகேஷ் வர்ஷினியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து யோகேஷ் வர்ஷினியை போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.