“மனைவி - மாமியார் டார்ச்சர் தாங்க முடியல, என்னை அடிச்சு கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று, வீடியோ வெளியிட்ட அப்பாவி கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியா, தற்போது டிஜிட்டல் இந்தியாவாக மாறி உள்ள பொழுதில், எங்கு என்ன நடந்தாலும் அவை அனைத்தும் பெரும்பாலும் ஊடக வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. அப்படிதான், ஒரு வித்தியாசமான தற்கொலை சம்பவமும் தற்போது ஊடக வெளிச்சத்திற்கு  வந்திருக்கிறது.

அதாவது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான ராஜா கேசரி என்ற இளைஞருக்கும், அங்குள்ள பக்கத்து ஊரைச் சேர்ந்த ரோஷினி என்ற நபருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.

திருமணம் ஆனது முதல் தொடக்கத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், போக போக புயல் வீசத் தொடங்கி இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு, தொடக்கத்தில் கணவன் ராஜா கேசரி வீட்டில், கணவனுடன் வசித்து வந்த அவர் மனைவி ரோஷினி, நாட்கள் செல்ல செல்ல வீட்டில் உள்ள மாமானார் மற்றும் மாமியாருடன் சண்டைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மாமியாருடன் பெரிய அளவில் சண்டைபோட்ட மருமகள் ரோஷினி, தனது கணவன் ராஜா கேசரியை அவரது பெற்றோரிடம் இருந்து பிரித்து, தனது அம்மா வீட்டிற்குக் கணவனை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

இதனால், கணவன் ராஜா கேசரிக்கு வேறு வழியின்றி, தன் மனைவியின் ரோஷினி வீட்டில் அவர் சொல்படியே கேட்டு நடந்து வந்திருக்கிறார்.

மாமியார் வீட்டில் சென்றதும் தொடக்கத்தில் அவரை நன்றாக கவனித்துக்கொண்ட மாமியாரும், மனைவியும் போக போக அவரை கொடுமைப்படுத்தத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி, நாளுக்கு நாள் அவர்களது கொடுமை அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கணவன் ராஜா கேசரி, தன் மனைவி மற்றும் மாமியாருடன் போராட முடியாமல், அந்த பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.

இது குறித்து, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, ஒரு வீடியோவை தனது பெற்றோருக்குப் பேசி அனுப்பியது தெரிய வந்தது.

அதனை வீடியோவை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீடியோவில், “என் மாமியாரும், என் மனைவியும் என்னை நாள்தோறும் அடித்து துன்புறுத்தி வருவதோடு, என்னை மிகவும் கேவலமான முறையில் சித்திரவதை செய்து வருகிறார்கள்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “என் மாமியாரும், என் மனைவியும் என்னைக் கைதி போல அடைத்து வைத்து உணவு மற்றும் தண்ணீர் கூட எனக்கு கொடுக்காமல் என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர் என்றும், இனியும் என்னால் உயிர் வாழ முடியாது” என்றும், அவர் தெரிவித்து இருந்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், ராஜா தற்கொலை தொடர்பாக அவரது மாமியார் மற்றும் மனைவியை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில், “ராஜா கேசரி உயிரிழப்பு தொடர்பாக, அவரது மாமியார் மற்றும் அவரது மனைவி ரோஷினி ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று, ராஜா கேசரியின் உறவினர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.