இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.5,400 கோடி வர்த்தகம் பாதிப்பு !
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
நாடு முழுக்க பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று வங்கி காசோலை பரிவர்த்தனைகள் முடங்கின. இன்றும் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டம் நாடு முழுக்க நடக்க உள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் இதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
மேலும் இந்த முடிவை மத்திய அரசு கைவிடக்கோரி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர். தமிழகத்தை பொறுத்தமட்டில் சுமார் 80 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும், முதிர்வடைந்த நிரந்தர டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமலும் காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் மக்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்களின் சேமிப்பு பணம் 157 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. பொதுமக்களின் பணம் என்பது அரசின் மேற்பார்வையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்த்து விட்டால் பொதுமக்களின் சேமிப்புக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் நடந்த போராட்டத்தில் குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில் பெரும்பாலான வங்கி கிளைகள் மூடப்பட்டன. 5.5 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்த நிலையில் ரூ.5 ஆயிரத்து 400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதைப்போல மும்பை, டெல்லி, சென்னை ஆகிய 3 மண்டலங்களில் சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலைகள் முடங்கியதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 6500 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன. இதில் 5800 வங்கி கிளைகள் வரை நேற்று செயல்படவில்லை. ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. சுமார் 80500 ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ஈடுபட்டனர். நாடு முழுக்க 12 லட்சம் ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் தனியார் வங்கிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கியது குறிப்பிடத்தக்கது.