”வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்கும் இந்தியர்கள்” தமிழகத்தில் காற்றின் தரம் மிக மோசம்!
“இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும்” என்கிற அதிர்ச்சி தகவல் ஒன்று, ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
Air Quality Life Index என்ற AQLI மேற்கொண்ட ஆய்வில் தான், இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது, ““இந்தியாவில் தற்போது நிலவி வரும் காற்று மாசின் அளவுகள் அப்படியே தொடர்ந்தால், ஏற்கெனவே மோசமான காற்று மாசுபாட்டில் உள்ள இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும்” என்றும், Air Quality Life Index நிறுவனம் மேற்கொண்ட தனது ஆய்வில் சுட்டிக்காட்டி இருக்கிறது.
அத்துடன், “உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகள் மிக மோசமாகக் காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ச்சியாக முதல் 5 இடங்களில் உள்ளதாகவும்” பட்டியலிட்டு உள்ளது.
மேலும், “உலகின் மிகவும் மாசுபட்ட 40 நகரங்களின் பட்டியலில் 37 நகரங்கள் தெற்காசியப் பகுதியில் உள்ளது” என்றும், அந்த நிறுவனம் கூறியுள்ளது.
முக்கியமாக, “இந்த மிகவும் மோசமான காற்று மாசுபட்ட நகரங்களில் 185 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்றும், இவர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் சராசரியாக 5 ஆண்டுகளை இழப்பதாகவும், உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் சராசரியாக 2.2 ஆண்டுகள் குறைவதாகவும்” கூறியுள்ளது.
குறிப்பாக, “டெல்லி, கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களில் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் காலம் கிட்டதட்ட 9 ஆண்டுகள் வரை குறைவதாகவும்” AQLI ஆய்வறிக்கையின் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் காற்றின் தரத்தை உயர்த்த அரசு உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு, சில யோசனைகளை வழங்கியதோடு, கோரிக்கையும் விடுத்து உள்ளது.
அதன் படி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கையில், “சிகரெட் பிடிப்பது அல்லது காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட காற்று மாசுபாடு மனித ஆயுளை வெகுவாகக் குறைக்கிறது என்பது, AQLI மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக” பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால், பெரும்பாலான இந்திய நகரங்கள் பாதிக்கப்பட உள்ள நிலையில், தற்போது காற்றின் தரம் குறைந்து மனிதர்களின் உயிர்கள் தங்களது வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனையாகவும், பரிதாபத்திற்கு உரியதாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.