எரிபொருள் விலை அதிகரிப்பால் எகிறபோகும் விமான கட்டணம்!
இந்தியாவில் எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனால் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் முழுவீச்சில் இயங்கி வருகிறது. விமான சேவைகளுக்கான கட்டணமும் பெரிதாக உயர்த்தப்படாமல் இருந்து வந்தன. இதற்கிடையே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து பெரும்பாலான நாடுகளில் மீண்டும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது.
இதனால் கச்சா எண்ணெயின் விலையோடு விமான எரிபொருள் விலையும் உயர்ந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப். எனும் பெட்ரோலிய எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. விமான எரிபொருளின் விலை நேற்று 18 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏ.டி.எப். விலை கிலோ லிட்டருக்கு ரூ.17,135.63 (18.3 சதவீதம்) அதிகரிக்கப்பட்டு ரூ.1,10,666.29 ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் விமான எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது இது 6-வது முறை ஆகும். மேலும் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டர் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விமான எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ந்தேதிகளில் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 140 டாலராக அதிகரித்தது.
மேலும் இதனை கருத்தில் கொண்டே இந்த விலை உயர்வை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒரு கிலோ லிட்டர் ஏ.டி.எப். விலை டெல்லியில் ரூ.1,09,119.83 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,14,979.7 ஆகவும் நிர்ணம் செய்யப்பட்டன. விமான நிறுவனங்கள் 40 சதவீதம் வரை எரிபொருளுக்காக செலவிடுகிறது.
விமான எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணங்கள் உயருகிறது. உள்நாட்டு கட்டணம், வெளிநாட்டு கட்டணங்களை மாற்றி அமைத்து விமான நிறுவனங்கள் கட்டண விவரங்களை வெளியிட உள்ளது. அதன்பிறகே விமானங்களின் கட்டணங்கள் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது தெரியவரும்.
மார்ச் 27-ம் தேதி முதல் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வழக்கமான சர்வதேச விமானப் பயணத்தை மீண்டும் தொடங்கவும் இந்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதை தொடர்ந்து விமானக் கட்டணம் 40 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக கூறபட்டது. ஆனால் தற்போது எரிபொருள் விலை ஏற்றத்தால் விமான கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.