முல்லைப் பெரியார் பிரச்சனை மீண்டும் வெடித்து கிளம்பி உள்ள நிலையில், கேரள நடிகர் பிருத்விராஜுக்கு தமிழகத்தில் மிக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயத்திற்கு பெரிதும் துணை நிற்கிற முல்லைப்பெரியாறு அணை. இந்த முல்லைப்பெரியாறு அணையை பயன்பெறுவது தமிழகம் என்றாலும், இந்த அணைக்கட்டு அமைந்துள்ள இடம் கேரள மாநிலத்திற்குள் இருக்கிறது.
அதுவும், இந்த அணையின் அதிக பட்ச உயரம் 155 அடி உயரமாகவுமு், அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி.யாவும் இருந்து வருகிறது.
இந்த அணையின் பாதுகாப்பு கருதி 142 அடி வரை மட்டுமே இங்கு நீர் தேக்கம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தி இருந்தது.
இதற்கு, கட்சி வித்தியாசமின்றி கேரள மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது தொடர்பாக பல எதிர்ப்புகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
அத்துடன், 125 ஆண்டுகள் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும் என்றும், கேரளா இரண்டாக பிளந்து விடும் என்பது கேரள அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.
கேரளாவில் பருவ மழை தொடங்கி கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது.
இதன் காரணமாக, அணையின் நீர்மட்டத்தை குறைக்க ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சூழலில் தான், “முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும்” என்று, மலையாள நடிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை கூறி வந்தனர்.
முக்கியமாக “Decommission Mullaperiyar Dam” என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தையும் அவர்கள் பதிவிட்டு வந்தனர்.
அதன்படி, கேரள நடிகர் பிருத்விராஜ், “#DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொருட்படுத்தாமல் 125 வருட அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருக்க காரணமோ மன்னிப்போ இல்லை என்றும், நாம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஒருபுறம் வைத்து எது சரியானதோ அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும், சிஸ்டம் சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம்” என்றும் கூறியிருந்தார்.
நடிகர் பிரித்விராஜின் இந்த கருத்துக்கும் மலையாள நடிகர்களின் கருத்துக்கும், தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்.
முக்கியமாக, “தன்னை ஒரு மலையாளியாக முன்னிறுத்திக் கொள்வதில் தீவிரமானவரான” நடிகர் பிருத்திவிராஜ் கருத்துக்கு, தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழந்தது.
அதன் தொடர்ச்சியாக, “முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புதிய முல்லைப்பெரியாறு அணையை கட்ட வேண்டும்” என்கிற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் பினராயி விஜயன், “முல்லை பெரியாறு அணை குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மையல்லை என்றும், கேரளாவில் மழை தொடர்ந்தால், நிலையான கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்றும், குறிப்பிட்டார்.
மேலும், “மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது போல் பதிவு செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை” என்றும், அவர் தெரிவித்தார்.
ஆனாலும், நடிகர் பிருத்திவிராஜ் கருத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.
இதனால், “அணைக்கு வயது நிர்ணயம் செய்ய, அணை விலங்கோ, மனிதனோ அல்ல என்றும், அணையின் பலத்தைப் பொறுத்து அது எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தாக்குப் பிடிக்கும் என்றும், 125 ஆண்டுகள் கழிந்த எத்தனையோ அணைகள் இந்தியாவில் உள்ளன என்றும், அதையெல்லாம் இடிக்க வேண்டும் என்கிறாரா பிருத்விராஜ்?” என்கிற எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது.
நடிகர் பிருத்திவிராஜ் கருத்து இணையத்தில் தொடர்ந்து பரவி வருவதால், பிருத்விராஜின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் மிக கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்து உள்ளது.
இதனால், நடிகர் பிரத்திவிராஜின் புகைப்படத்தை எரித்தும், அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள், தனி நபர்கள் என பலதரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.