கர்நாடகவை சேர்ந்த போக்குவரத்து ஊழியர் ஒருவர், பண கஷ்டத்துக்காக தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்திலிருந்து, போக்குவரத்து நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அரசாங்கம் திணறியது. கர்நாடகம் போக்குவரத்து துறையும், ஊரடங்கு முடக்கத்தால் சம்பளம் வழங்க முடியாமல் திணறியது. 


தற்போது போக்குவரத்து இயங்க ஆரம்பித்தாலும், ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மேலும் முழு சம்பளம் வழங்கப்பட வில்லை என்று ஊழியர்கள்  குற்றம்சாட்டுகிறார்கள். 


இந்நிலையில் மூன்று குழந்தைகள் , மனைவி, தாய் போதிய வருமானம் இல்லாமல் குடும்ப செலவுக்கு கர்நாடக போக்குவரத்து ஊழியரான அனுமந்தா கரகெரே திண்டாடி இருக்கிறார். மாத சம்பளமாக  16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்துள்ளார். கொரோனா ஊடரங்கிற்கு பிறகு சம்பளம் வெறும் 3500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்கி வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்ப தேவைகளை ஒருபக்கம், கடன் சுமை மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே செல்ல, ஒரு கட்டத்துக்கு மேல் வேறு வழியின்றி தனது சிறுநீரத்தை விற்க முடிவெடுத்துள்ளார்.


இதுகுறித்து அனுமந்தா கரகெரே தனது பேஸ்புக் பக்கத்தில், ‘’ வீட்டில் வயதான தாய் உள்ளார். அவரது மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கிறது. மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியுள்ளது. ரேசன் பொருட்களை வாங்ககூட முடியாமல் கஷ்டத்தில் வாடியதால், தனது குடும்பத்துக்காக சிறுநீரகத்தை விற்றுவிட்டேன்’’ என பதிவிட்டுள்ளார்.