பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ரூ.960 கோடி! என்ன நடக்கிறது?
பள்ளி மாணவர்களின் வங்கி கணக்குகளில் 960 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதால், வங்கி அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பீகார் மாநிலம் கஹிகார் மாவட்டம் பாத்தியா கிராமத்தை சேர்ந்த குருச்சந்திர விஸ்வாஸ் மற்றும் ஆஷித் குமார் ஆகிய இரு மாணவர்களும், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொலைக்காக வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த வங்கி கணக்கு மூலமாகவே, மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகையானது வந்துக்கொண்டிருந்தது.
இப்படியான சூழலில், மாணவர்கள் இருவரும் தங்களது “பள்ளியின் சலுகைகளைப் பெற தொடங்கப்படட வங்கி கணக்கில் செலுத்தப்படும் சீருடை மற்றும் பள்ளி கட்டணத்திற்கான உதவித் தொகை வந்து விட்டதா?” என்பதை பார்க்க அங்குள்ள உத்தர் பிஹார் கிராமின் வங்கிக்கு சென்று உள்ளனர்.
அப்போது, மாணவர்களின் வங்கி பாஸ்க்கை வாங்கி, கணக்கை சரிபார்த்த வங்கி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, “மாணவன் ஆஷித் குமாரின் வங்கி கணக்கில் 900 கோடியும், குரு சந்திர விஸ்வாஸ் கணக்கில் 60 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது” தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், மாணவர்களிடம் விசாரித்து உள்ளனர். ஆனால், மாணவர்களுக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை. இதனால், சற்று குழப்பத்துடன் வீடு திரும்பிய மாணவர்கள் இருவரும், தங்களது சொந்த கிராம மக்களிடம் இது குறித்து கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு சற்றே அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள் பலரும், மாணவர்களின் வங்கி ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று தங்களது கணக்கில் ஏதேனும் தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சோதித்துள்ளனர்.
அப்போது, குறிப்பிட்ட அந்த வங்கி மேலாளர், மாணவர்கள் பணத்தை எடுக்காத வண்ணம் அந்த கணக்குகளை அப்படியே முடக்கி வைத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அந்த மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா, “மாணவர்களின் கணக்குகளில் இவ்வளவு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று, குறிப்பிட்டார்.
“வங்கிக் கணினி செயல்பாட்டால், மாணவர்களின் கணக்கில் இவ்வளவு பணம் இருப்பதாக காட்டுகிறதே தவிர, உண்மையில் மாணவர்களின் கணக்கில் அந்த தொகை இல்லை” என்றும், அவர் கூறினார்.
அத்துடன், “பிஹாரில் இது போன்ற ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்தது என்றும், கக்காரியா மாவட்டத்தில் உள்ள பக்தியாபூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஜாஸ் என்பவரது கணக்கில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது” என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.