“கொரோனா 3 ஆம் அலை அக்டோபரில் உச்சம்!” பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை சமர்பிப்பு..
“இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம்” என்று, மத்திய அரசின் நிபுணர்கள் குழு பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலையில் ஏற்பட்ட தொற்றின் பாதிப்பானது சற்று குறைந்து வருகிறது.
எனினும், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 ஆகவும், நேற்றைய தினம் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக” மத்திய சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த எண்ணிக்கையானது நேற்று முன்தினம் 34,457 ஆகவும் இருந்தது. இதனால், கடந்த நாட்களை ஒப்பிடும் போது, தொற்று பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. இப்படியாக, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 3,24,49,306 ஆக அதிகரித்திருக்கிறது.
அத்துடன், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கையானது நேற்றைய தினம் 403 ஆக இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக அதிகரித்து இருக்கிறது.
இப்படியாக, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் சூழலில், கொரோனாவின் 3 வது அலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தான், இந்தியாவில் கொரோனா தொற்றின் 3 வது அலை எப்போது உச்சம் அடையும்?” என்பது பற்றிய அறிக்கையை, பிரதமர் அலுவலகத்தில் மத்திய அரசின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்து உள்ளது.
அதாவது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழுவினர், “கொரோனா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை” வழங்கி வருகிறது.
இந்த சூழலில் தான், “இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பான விரிவான அறிக்கையை, பிரதமர் அலுவலகத்திற்கு தேசிய நிபுணர் குழு தற்போது புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருக்கிறது.
அந்த அறிக்கையில், “3 வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், குழந்தைகளுக்கான சிகிச்சைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், “இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா பரவல் சிறிது சிறிதாக மீண்டும் அதிகமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டி உள்ள தேசிய நிபுணர் குழு, கொரோனா 2 ஆம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் 3 ஆம் அலையில் இருக்கக் கூடும்” என்றும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.
இதனால், “கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை இன்னும் தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் தீவிரமாக பின்பற்ற வேண்டும்” என்றும், அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், “நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவை இருப்பு வைக்க வேண்டும்” என்றும், அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “மற்ற இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக முன்னுரிமை கொடுப்பது மிக அவசியம்” என்றும், அந்த அறிக்கையில் மத்திய அரசின் நிபுணர்கள் குழு அறிவுறுத்தி உள்ளது.