வடகிழக்கு பருவமழையால் மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தது.மேலும் மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நிவர்புயல் கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் மேலும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.