“இந்திய 'பி' அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளரானால், அணியில் ஆளுமை செலுத்தி வரும் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்” என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி வரும் ஜூன் 18 ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது.
அத்துடன், சவுத்தாம்ப்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
அதைத் தொடர்ச்சியாக, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்குகிறது.
இப்படியாக, மூன்றரை மாதங்கள் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக, கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது, வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு செல்கிறது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் கிட்டத்தட்ட 20 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இதில், 4 மாற்று வீரர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதாவது 22 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் இடைவெளி இருக்கிறது. இதனால், ஜுலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்து உள்ளார்.
அதன் படி, “இந்திய 'பி' டீம் இத்தொடரில் பங்கேற்கும் என்றும்” சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
“இலங்கைக்கு எதிரான தொடரில், சீனியர் வீரர்களில் ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவர் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்கின்றனர் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஜுனியர் வீரர்கள் தான்” என்றும், சவுரவ் கங்குலி குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், இலங்கை தொடருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை, பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் கூறப்படவில்லை.
அதே சமயம், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், “இந்திய அணிக்கு இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும்” என்றும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு காரணம், “இன்றைய இந்திய அணியின் எதிர்காலங்களாகவும், நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், ஐபிஎல் ஸ்டார்ஸ்களாகவும் ஜொலித்து வரும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி செதுக்கியவர் ராகுல் டிராவிட்” தான் என்று, கூறப்படுகிறது.
அந்த பட்டியிலில், “ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி” என்று, ராகுல் டிராவிட் உருவாக்கி செதுக்கிய பட்டியல் நீள்கிறது.
மேலும், “டிராவின் பயிற்சியின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணியானது, கடந்த 2018 ஆம் ஆண்டில் கோப்பையை வென்றுக்காட்டியது. இதனால், ராகுல் டிராவிட் போன்ற ஒரு மெகா ஸ்டார் பயிற்சியாளராக இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வேண்டும்’ என்று கிரிக்கெட் தொடர்புடைய பலரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இலங்கைத் தொடருக்கு டிராவிட் பயிற்சியாளராக வந்தால், அது கேப்டன் விராட் கோலிக்கே மறைமுக எச்சரிக்கையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தற்போது, இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலிக்கு மிக நெருக்கமானவர் என்பது அனைவரும் அறிந்த விசயம்.
ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவை, “எங்களை இவர் ஸ்கூல் பிள்ளைகள் போல் நடத்துகிறார்” என்று, கேப்டன் விராட் கோலி, குற்றச்சாட்டி இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, கேப்டன் விராட் கோலிக்கும் - பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் வெடித்துக் கிளம்பியது. இதன் காரணமாக, தானாக முன் வந்து கும்ப்ளே பதவி விலகினார்.
அப்போது, “இந்திய அணியில் கடந்த ஒருவருடமாகப் பெற்ற வெற்றிக்கு கேப்டனும், சக வீரர்களுமே முழு காரணம்” என்று, தனது பாராட்டுகளைத் தெரிவித்து, தனது முதிர்ச்சியையும், அவர் பதிவு செய்துவிட்டு சென்றார்.
ஆனால், “கடந்த 2016 ஆம் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, விராட் கோலி தனது டிவிட்டரில் பதிவிட்ட டிவீட்டை அந்த நேரத்தில் விராட் கோலி நீக்கி” சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டார்.
இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், “உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும், போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும். கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்” என்று, அதிரடியான தனது கருத்துக்களை முன் வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, வீரேந்திர சேவாக் பயிற்சியாளர் போட்டிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், கேப்டன் கோலியின் முழு ஆதரவோடு ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார்.
இப்படியான இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அரசியல் சூழலில் இந்திய அணி இருக்கும் சூழலில், இந்திய 'பி' அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளரானால், அது ரவி சாஸ்திரி தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே பார்க்கப்படும் என்றும், குறிப்பாக இது வரை இந்திய அணியில் ஆளுமை செலுத்தி வரும் கேப்டன் விராட் கோலிக்கும் அது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என்றும், கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், இது எதற்கும் பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.