ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா! “காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெறலாம்..”
“ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம்” என்று, தகவல்கள் வெளியான நிலையில், ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடங்கி உள்ளது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் முழுமையாகக் கைப்பற்றி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேற இருக்கின்றன.
அத்துடன், தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விமானம் மூலம் தொடர்ந்து மீட்டு வருகின்றன.
மேலும், தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் பல ஆப்கானியர்களும் பல்வேறு நாடுகள் அவர்களை மீட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான், காபூல் விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்திருக்கிறது. இதில், 13 பேர் அமெரிக்க பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஆவர்.
அதே போல், “காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்” என்று, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தற்போது தாக்குதலை நடத்தி உள்ளது.
அதாவது, அந்த நாட்டின் நங்ஹகர் மாகாணத்தில் இருக்கும் ஐ.எஸ். ஹரசன் பிரிவு பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் அமெரிக்கப் படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தித் தொடங்கி உள்ளனர்.
அமெரிக்கா நடத்திய இந்த இந்த வான்வெளி தாக்குதலில் “இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி விட்டதாக” அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் தெரிவித்து உள்ளது.
காபூல் விமான நிலைய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்கப் படைகள் வரும் 31 ம் தேதி முழுவதும் வெளியேற இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, “விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம்” என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, மற்ற உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும் படி, அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.