“திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ அனுமதி!” ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..
By Aruvi | Galatta | Nov 09, 2020, 08:45 pm
“திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ அனுமதி” அளித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் தற்போது பல்வேறு அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
அதன் படி, “உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து” செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது அருந்தவும், அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதிக்கப்பட வில்லை” என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, “திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது இது வரை குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், “14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மன நோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும்” என்றும், ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது.
அதே போல், “ஆணவக் கொலைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகச் சட்டங்கள் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், பெண்கள் மீதான குற்றங்கள் இனி பிற குற்றங்களுக்கு இணையாகக் கருதப்படும் எனவும், இந்த புதிய சட்டத்தில் தற்போது திருத்தம்” கொண்டு வரப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “பெண்களை கெளரவக் கொலை செய்வது, இனி கொலை குற்றமாகக் கருதப்படும்” எனவும் ஐக்கிய அரபு அமீரக அரசு, கூறி இருக்கிறது. அதற்கு காரணமாக, “ஒவ்வோர் ஆண்டும், உலகில் ஆயிரக் கணக்கான பெண்கள், தங்கள் குடும்பத்துக்கு களங்கம் விளைவித்து விட்டதாகக் கருதி, படு கொலை செய்யப்படுவதாக மனித உரிமைக் குழுக்கள்” குற்றம் சாட்டுகின்றன.
இப்படி, “பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு, திருமணம் செய்து கொண்டவரைத் தாண்டி, மற்றவர்களிடம் உடல் ரீதியான பாலியல் உறவு வைத்துக் கொள்வது அல்லது மற்றவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்படுவதைக் காரணமாகச் சொல்கிறார்கள். இதை அங்கு கெளரவக் கொலை என்று கூறுகிறார்கள். இந்த மரணங்களைத் தவறான முறையில் விவரிக்கிறார்கள் என்று சொல்பவர்கள், இதனை கெளரவக் கொலை என கூறுவதை விமர்சிக்கிறார்கள். இப்படியாக, பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக, கடுமையான தண்டனைகளை வழங்குவது, பெண்கள் உரிமையை பாதுகாக்கவே ஐக்கிய அரபு அமீரக அரசு இத்தனை உறுதியாக இருக்கிறது” என்பதை இந்த புதிய சட்ட விதிமுறைகள் வெளிப்படுத்துகின்றன.
மேலும், “தற்கொலையும், தற்கொலை முயற்சியும் ஒரு குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அது தற்போது தளர்த்தப்பட்டு உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், “வெளி நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறி வாழும் வெளிநாட்டவருக்கு, தான் விரும்பும் பரம்பரை மற்றும் உயில் சம்பந்தப்பட்ட சட்டங்களைத் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்கி” இருக்கிறது.
“இந்த சட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரு நிதி நிலைத் தன்மையை அடைய உதவும்” என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக, “மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத செயல்களை, ஐக்கிய அரபு அமீரக அரசு, கிரிமினல் குற்றமாகக் கருதப்படாதவாறு மாற்றும்” எனவும், கூறி இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை, இரு தரப்பினர் இடையிலும் மத்தியஸ்தம் செய்து கையெழுத்திட வைத்தது அமெரிக்கா. அதன் பின்பே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.