ஹெச்.1.பி. விசா இருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! - ட்ரம்ப் அரசாங்கத்தில் கடுமையான உத்தரவு!
By Nivetha | Galatta | Aug 04, 2020, 04:51 pm
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே ட்ரம்ப் அரசாங்கம் அதிரடியான நடவடிக்கைகள் பலவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இன்றைய தினமும் அதிரடியான ஒரு செயலை செய்திருக்கிறார் ட்ரம்ப்.
அதில் அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பணியாளர்களுக்கு பேரிடியாக அமையும் உத்தரவொன்று இடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி அமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்த முடியாது, ஒப்பந்தம் செய்யவும் முடியாது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கவிருப்பதால் அமெரிக்கர்களின் நலன்களைக் கருதி அதிபர் ட்ரம்ப் ஹெச்1பி விசா மற்றும் அயல்நாட்டினரை பணியில் அமர்த்துவதற்கு உதவும் பிற விசாக்களை 2020 முடியும் வரை நிறுத்தி வைத்து ஏற்கெனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் பெரிதும் நாடும் விசா ஹெச்.1 பி விசாவாகும். இந்த விசா வைத்திருப்பவர்களைத்தான் அமெரிக்க நிறுவனங்கள் பணி ஒப்பந்தம் செய்ய முடியும். இதன் மூலம் தன இந்திய, சீன பணியாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் இந்த புதிய உத்தரவு பற்றி கூறும்போது, “அமெரிக்க அரசு ஒரேயொரு எளிமையான விதியின் கீழ் செயல்படுவதை உறுதி செய்யும் உத்தரவில் இன்று நான் கையெழுத்திடுகிறேன். அதாவது அமெரிக்கர்களை வேலைக்கு எடுங்கள், அமெரிக்கர்களுக்கு ஒப்பந்தம் கொடுங்கள்" எனக்கூறியிருக்கிறார்
அதாவது, ``எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை பணியிலமர்த்துவதை செய்யக் கூடாது. ஹெச்1பி விசா அமெரிக்க வேலைகளை அழிப்பதற்கானதல்ல" என்பது தான் அடிப்படை.
ட்ரம்பின் இந்த முடிவுக்குக் காரணமாக, முன்வைக்கப்படுவது - அமெரிக்க அரசுத்துறையான டெனிஸீ பள்ளத்தாக்கு ஆணையம் தனது பணிகளில் 20% தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை வெளிநாட்டினருக்கு அவுட்சோர்ஸ் செய்யப்போவதாக அறிவித்தது.
இதனால் அமெரிக்காவின் உயர் திறமை பெற்ற 200 தொழில்நுட்ப பணியாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆக இதன் காரணமாக 1 லட்சம் பேர் அமெரிக்காவிலிருந்து புலம் பெயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஐடி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி ஊழியர்களில் பலரின் கனவே அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது தான். ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், இந்திய ஐடி ஊழியர்களின் கனவு எப்படி சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.
கொரோனா பெருந்தொற்றினால் ஏற்கெனவே வேலையின்மை இருந்து வரும் நிலையில் அரசு ஒப்பந்தங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வதை அனுமதிக்க முடியாது என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் மேலும் கூறுகையில் குடியேற்ற மசோதா ஒன்றை விரைவில் விவாதிக்கவிருக்கிறோம். இது ஒட்டுமொத்தமான ஒரு மசோதாவாக இருக்கும். திறமை, தகுதியின் அடிப்படையில்தான் இனி விசா. இதுவரை இல்லாத பகுதிகளையெல்லாம் உள்ளடக்கிய மசோதாவாக இருக்கும்.
குடியேற்றம் தகுதி அடிப்படையில்தான். அது நம் நாட்டுக்கு வருபவர்களுக்கு அருமையானதாக இருக்கும். அதாவது சட்ட பூர்வமாக நம் நாட்டுக்கு வருபவர்கள் நம் நாட்டை நேசிப்பதாக அது இருக்கும், நம் நாட்டுக்கு உதவுவதாக இருக்கும். அதாவது நம் நாட்டுக்கு வந்து சம்பாதித்து நம் நாட்டையே வெறுப்பதாக அது இருக்காது, என்றார்.
அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் 2020 இறுதி வரை ஹெச்.1 பி விசா மற்றும் இதர வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படாது என்று ஜுன் 23 ஆம் தேதி அறிவித்த நிலையில், புதிய கெடுபிடிகளை அறிவிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.