பெண் ஒருவருக்கு சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 3 கொரோனா டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டு உள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மாநிலம் தானே மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஆனந்த் நகரில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை தடுப்பூசி போடச் சொல்லிவிட்டு, அவர் பணிக்கு திரும்பி உள்ளார்.
அப்போது, கொரோனா ஊசி போட அந்த பெண் காத்துக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்த சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 3 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டது. ஆனால், இது குறித்து, அந்த பெண் அங்குள்ள செவிலியர்களிடம் கூறியும், அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால், பயந்து போன 3 ஊசிகளை போட்டுக்கொண்ட அந்த பெண், தனக்கு தொடர்ச்சியாக 3 ஊசிகள் போடப்பட்டது குறித்து தனது கணவரிடம் கூறி உள்ளார்.
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாநகராட்சியில் பணியாற்றும் அவரது கணவர், இது குறித்து, சம்மந்தப்பட்ட கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று விளக்கம் கேட்டு உள்ளார். அப்போது, மருத்துவர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தான், இந்த விவகாரம் பொது மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
மருத்துவர்கள் சரியாக பதில் அளிக்காததை தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவர் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரியிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் தற்போது தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
அத்துடன், அந்தப் பெண்ணின் கணவர், மாநகராட்சியில் பணி புரிந்து வருவதால் இது தொடர்பாக யார் மீதும் அவர் எந்தவித புகாரும் அளிக்க வில்லை.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது, “எனது மனைவி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட சென்றதால், தடுப்பூசி செயல் முறை பற்றி அவர் முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை.
தடுப்பூசி போட்ட பிறகு, அவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. ஆனால், அது மறுநாள் காலையில் குறைந்து விட்டது. அவர் இப்போது நன்றாக இருக்கிறார்” என்று, அவர் தெரிவித்து உள்ளார்.
அதே போல், இது தொடர்பாக மாநகராட்சி மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரே பேசும் போது, “டாக்டர்கள் குழு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், தற்போது ஒரே நேரத்தில் 3 டோஸ் ஊசி போட்டுக்கொண்ட அந்த பெண், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், “இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை தற்போது நாங்கள் அமைத்துள்ளோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தானே நகரின் மேயர் நரேஷ் மஸ்கே பேசும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார்.