“நீங்கள் புகைப்பிடிப்பவரா?” இது, உலக சுகாதார அமைப்பு உங்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!
By Aruvi | Galatta | May 31, 2021, 03:19 pm
கொரோனா வைரஸ் தொற்று நோய், உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மிக கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், புகைப்பிடிப்பவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கொடூர பெருந்தொற்று நோய்.
இந்த கொரோனா என்னும் அரக்க நோய், உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மிக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
இப்படியான இன்றைய சூழலில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகப்படியான உயிரிழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் அது வந்து உள்ளது. எனினும், இந்தியா
போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளுக்கு இன்னும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது.ஷ
அதே நேரத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலையில், அதிகப்படியான உயிரிழப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது.
இந்த அபாயகரமான நேரத்தில், உலக சுகாதார அமைப்பானது, கொரோனா தொற்று பற்றிய புதிய எச்சரிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு 50 சதவீதம் கூடுதலாகத் தீவிர கொரோனா தொற்று பாதிப்பும், அதன் தொடர்ச்சியாக உயிரிழப்பும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அத்துடன், “Commit to Quit” என்ற தலைப்பில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், “கொரோனா தொற்று வராமல் இனி தடுக்க வேண்டும் என்றால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கை விடுவதைத் தவிர, வேறு வழியில்லை” என்றும், குறிப்பிட்டு உள்ளது.
“இது தவிர இதய நோய்கள், புற்று நோய், சுவாச நோய்கள் வருவதையும் புகைப்பழக்கத்தை கை விடுவதன் மூலமாகவே தவிர்க்கலாம்” என்றும், உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை வழங்கி உள்ளது.
மிக முக்கியமாக, “புகைபிடித்தல், கொரோனா வைரசைக் கையிலிருந்து வாய்க்குப் பரப்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது” என்றும், உலக சுகாதார அமைப்பு மிக கடுமையாக எச்சரித்து உள்ளது.
இதனால், “உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான பிரச்சாரத்தில் சேர்ந்து, புகையிலை இல்லாத சூழல்களை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் தங்கள்
பங்களிப்பை வழங்க வேண்டும்” என்றும், அந்த அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.
மேலும், “புகையிலை பழக்கத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு, தேவையான தகவல்கள் மற்றும் கருவிகளை உலக நாடுகளுக்கு நாங்கள் வழங்குவோம்” என்றும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
குறிப்பாக, “இந்தியாவில் இ சிகரெட்டுகள் உட்பட, சூடான புகையிலை பொருட்களைத் தடை செய்ததற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு, சிறப்பு விருதினை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் வழங்கியதையும், தற்போது நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.