உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் பொருள்களுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. அந்தப் பொருள்களின் தரத்தின் காரணமாகவே மக்களிடம் சாம்சாங்குக்கு அத்தனை மதிப்பு இருந்துவருகிறது. 

தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் லீ குன் ஹீ. அதுவரையில் மேற்குலக நாடுகள், குறைந்த விலையில் தொலைக்காட்சியை விற்பனை செய்யும் நிறுவனமாகத் தான் சாம்சங்கைப் பார்த்தார்கள். லீ குன் இடைவிடாது முயற்சி செய்து சாம்சங்கை தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்தார்.

இப்படியாக உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ இன்று காலமானார். அவருக்கு வயது 78. கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தநிலையில் இன்று காலமானார் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரண டிவி நிறுவனமான இருந்த சாம்சங் நிறுவனத்தை லீ குன் ஹீ தனது தந்தையிடம் இருந்து பெற்று இன்று உலகின் பெரிய நிறுவனமாக மாற்றியுள்ளார். ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ``சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் லீ குன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கியபின் அவரின் சசோதரரும், லீ குன் மகனுமான லீ ஜே யங்கும் சேர்ந்து கவனித்து வந்தனர். தென் கொரியாவில் ஒரு குடும்பத்தால் நடத்தப்பும் மிகப்பெரிய தொழிற்சாலை எனும் பெருமையை சாம்சங் நிறுவனம் பெற்றிருந்தது.

ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமான வளர்ந்த சாம்சங் நிறுவனம் மின்னணு துறை தவிர்த்து கப்பல் கட்டுதல், காப்பீடு, கட்டுமானம், ஹோட்டல் நடத்துதல், தீம் பார்க்க உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஜப்பான் மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட கொரிய தீபகற்பத்தில் உள்ள டியாகு எனும் நகரில் லீ குன் பிறந்தார். லீ குன் தந்தை லீ யங் சல் கடந்த 1938-ம் ஆண்டுவரை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். அதன்பின் 1950-53-ம் ஆண்டு கொரியப் போருக்குப்பின் பல இழப்புகளைச் சந்தித்த லீ யங் சல், தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

வீடுகளுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம் என்று சாம்சங் நிறுவனத்தை அறிமுகம் செய்து லீ யங் சல் நடத்தி வந்தார். தனது தந்தை மறைவுப்பின் லீ குன் அந்த நிறுவனத்தை கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஏற்று நடத்தத் தொடங்கினார். 1993-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தில் பல்வேறு புத்தாக்கங்கள், புதிய பொருட்கள் கண்டுபிடிப்புகளைச் செய்து அனைவரையும் லீ குன் திரும்பிப்பார்க்க வைத்தார்.

வெற்றிகரமாக சாம்சங் நிறுவனத்தை நடத்திய லீ குன் கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு நோயில் விழுந்தார். அதன்பின் நிறுவனத்தைக் கவனிப்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்ட நிலையில் தீவிர உடல்நல பாதிப்பால் இன்று காலமானார்.

1990-களில் சாம்சங் நிறுவனம் மெமரி சிப் உருவாக் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களைத் தாண்டி வளர்ந்தது. 2000-களில் செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாகியது. தென்கொரியாவின் பொருளாதாரத்தில் சாம்சங் எலக்ரானிக்ஸ் முக்கிய நிறுவனமாக உள்ளது. உலக அளவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக பணம் செலவிடும் நிறுவனமாகவும் உள்ளது. 1987-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை சாம்சங் குழுமத்தின் தலைவராக இருந்தார். 1998 முதல் 2008-ம் ஆண்டுவரை சாம்சங் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.

2008-ம் ஆண்டு முதல் அவருடைய இறப்புவரை சாம்சங் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1996-ம் ஆண்டு நாட்டின் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் மன்னிக்கவும் பட்டார். அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மீதான வரி ஏய்ப்பு குற்றமும் உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், இன்று காலையில் லீ குன் உயிரிழந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவருடைய இறப்புக்கான காரணம் விளக்கப்படவில்லை.