“இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் மதம் சார்ந்த கூட்டம் கூடியதே முக்கிய காரணம்” என்று, உலக சுகாதார நிறுவனம் கவலைத் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 வது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3.62 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அதே போல், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பானது நேற்று 30 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 293 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இப்படியாக இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையை சமாளிக்க முடியாமல் மத்திய - மாநில அரசுகள் திணறி வருகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளுக்குப் பரவியது. கடந்த ஆண்டு இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டன.
அத்துடன், கொரோனவின் முதல் அலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கொரோனாவின் இந்த 2 வது அலையில், கொரோனா தொற்று பரவும் வேகமும், உயிரிழப்போரின் சதவிகிதமும் தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. அதன் படி, “இந்தியாவில் B.1.617 வகையின் முந்தைய வகை வைரஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான், இந்தியாவில் காணப்பட்டது என்றும். தற்போது இந்த வைரஸ் மீண்டும் எழுச்சிபெற்று பரவ தொடங்கி இருக்கிறது” என்றும், குறிப்பிட்டு உள்ளது.
“இந்த வைரஸ் மீண்டும் இந்தியாவில் பரவுவதற்கு இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளும், மதச்சார்பான கூட்டங்களுமே முக்கியாக காரணமாக இருக்கலாம்” என்றும், தெரிவித்து உள்ளது.
“பொதுச் சுகாதாரம் தொடர்பான குறைவான புரிதலும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்றும், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
“இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 21 சதவீதம் B.1.617.1 வகை வைரஸ் வகை பாதிப்பு. 7 சதவீத பரிசோதனைகள் B.1.617.2 வகை வைரஸ் பாதிப்பா உள்ளது” என்றும், குறிப்பிட்டு உள்ளது.
“தினமும் புதிதாக வைரஸ் பாதிக்கும் சதவிகிதம் இந்தியாவில் அதிகரித்து உள்ளது என்றும், கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக உயிரிழக்கும் சதவிகிதமும் தொடர்ந்து அதிகரித்து உள்ளது” என்றும், உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.
இதனிடையே, “இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் தேவை” என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐசிஎம்ஆர்) தலைவர் பல்ராம் பார்கவா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.