“பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு இல்லை.. ஆனால், நாடாளுமன்றம் கலைப்பு!” என்னதான் நடக்கிறது?
பாகிஸ்தான் நாட்டில் ஆட்சி கவிழ்ப்புக்கு பதிலாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து புதிய பிரதமரை அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையை போலவே, பாகிஸ்தான் நாட்டிலும் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு என, அந்நாடு பல சிக்கலில் சிக்கித் தவித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், அவரது ஆட்சியை கவிழ்க்க முன் வந்தன.
ஆனால், எதிர்க்கட்சிகளால் அது முடியாமல் போன நிலையில், பிரதமர் இம்ரான் கானின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த போது, இம்ரான்கானுக்கு அங்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.
இதனால், சற்று சாதுரியகமாக செயல்பட்ட பிரதமர் இம்ரான் கான், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் போர்கொடி தூக்கி கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த இக்காட்டான சூழ்நிலையில் தான், “எதிர் கட்சிகளின் இந்த செயல், பாகிஸ்தான் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்றுக் கூறி, இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, சபாநாயகர் காசின் கான், அதிரடியாக நிராகரித்தார்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திற்குள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்த நிலையில், பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றினார்.
அப்போது பேசிய இம்ரான் கான், “பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்ததாக” தெரிவித்தார்.
மேலும், “தனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதால், நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றும், ஆனால் பாகிஸ்தானில் யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்” என்றும், இம்ரான் கான் சூளுரைத்தார்.
இதனையடுத்து, “பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தை கலைப்பதாக” பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடியாக அறிவித்தார்.
குறிப்பாக, “அடுத்த 90 நாட்களுக்குள் பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்படும்” என்றும், பாகிஸ்தான் அதிபர் தற்போது அறிவித்து உள்ளார்.
முக்கியமாக, “நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதால், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட” எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
என்றாலும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் தற்போது அதிரடியாக கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், “புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தான்” என்று, இந்நாட்டு எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. இதனால், பாகிஸ்தான் அரசியலில் அனல் பறந்துகொண்டிருக்கிறது.