அன்பு, மரியாதை இருந்திருக்குமானால்..மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்துவிட்டு தானே நினைவகம் கட்டியிருக்க வேண்டும்? - மு.க.ஸ்டாலின் அறிக்கை

அன்பு, மரியாதை இருந்திருக்குமானால்..மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்துவிட்டு தானே நினைவகம் கட்டியிருக்க வேண்டும்? - மு.க.ஸ்டாலின் அறிக்கை - Daily news

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ’இதை விட, தரக் குறைவான - மலிவான - சுயநல நோக்கில், அரசு செலவில், தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது.’ என்று தெரிவித்து உள்ளார்.  


மேலும் அவர் , ‘’ ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மம் என்ன, அதற்கு யார் யாரெல்லாம் காரணம் என்பதை, நான்கு ஆண்டுகள் கழித்தும் கண்டுபிடிக்க முடியாத - கண்டுபிடிக்க விரும்பாத, ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க  முன்வராத, பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைப்பதற்கான, அடிப்படை  தார்மீக உரிமையோ - அருகதையோ இருக்கிறதா என்பது தான்,  நாட்டு மக்களும், ஜெயலலிதா விசுவாசிகளும் இப்போது  எழுப்புகின்ற முக்கிய கேள்வியாக இருக்கிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு, பத்தாவது முறையாக காலநீட்டிப்பு வழங்கி இருக்கிறது பழனிசாமி அரசு. அதாவது நீட்டிப்பு வழங்குவதன் மூலமாக உரிய நீதி கிடைப்பதை,  மர்மமும் உண்மையும் வெளிச்சத்திற்கு வருவதை, கால வரையறை இன்றித் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது பழனிசாமி அரசு. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்ல. இன்றைக்குத்  துணை முதலமைச்சராக இருக்கிற பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா நினைவிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்துவிட்டு, இப்படிச் சொன்னார்.

இவரின் வாயை அடைப்பதற்காகவும், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தான், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பழனிசாமியால் அமைக்கப்பட்டது. இப்படி நீதி விசாரணைக் கமிஷன் அமைத்துவிட்டார்கள் என்று சொல்லித்  தான், அதில் நிறைவடைந்து, பதவிக்காக ஓடிப்போய் பழனிசாமியுடன் மறுபடியும் சேர்ந்து கொண்டார் பன்னீர்செல்வம்.

அதற்காகவே அவருக்கு, துணை முதலமைச்சர் பதவி பரிசாகத் தரப்பட்டது. துணை முதலமைச்சர் பதவி கிடைத்ததும்,  பவிசும், ‘எளிமையாகத்’ தோற்றமளிக்கும் படாடோபமும், அவர் மனதைப் பற்றிக் கொண்டது; ஜெயலலிதாவை மறந்துவிட்டார் பன்னீர்செல்வம்; தனது மனதிலிருந்து வெளியேற்றி விட்டார்.

எந்தக் குற்றச்சாட்டை அவர் எழுப்பினாரோ, அந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், இதுவரை நேரில் சென்று வாக்குமூலம் அளித்து, மரண விபரம் வெளிவர உதவாத பன்னீர்செல்வத்துக்கு,   ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புவிழாவுக்கு முன்னிலை வகிக்க வெட்கமாக இல்லையா? உள்ளத்தில் உறுத்தல் ஏற்பட வில்லையா? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியைப் போல் செய்து, அதை எடுத்து வந்து  பிரச்சாரம் செய்தவர் தானே இந்த பன்னீர்செல்வம்? அவர் துணை முதலமைச்சர் ஆனபிறகு ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டாரா? அந்த சவப்பெட்டியில் உண்மையையும் சேர்த்து ஆணி அடித்து, அடக்கம் செய்து  விட்டாரா?

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், 'இதுபற்றி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அதில் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தான் முதலில் விசாரிக்க வேண்டும்' என்றார்.  'இல்லை பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இன்றைக்கு இவர்கள் இருவரும் ஒரே அமைச்சரவையில் தான் அங்கம்  வகிக்கிறார்கள். ஆனால் விசாரணை மட்டும் நடக்கவில்லை.இரண்டு பேரில் யார் உண்மையான குற்றவாளி? இருவருள் ஒருவர் குற்றவாளியா அல்லது இருவருமே குற்றவாளிகளா?

'மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளரைத் தான் முதலில்  விசாரிக்க வேண்டும்' என்று சட்டபூர்வமான இயற்கை வளக் கொள்ளை அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னார். சொன்ன மறுநாள் காலையில் அவரும் மறந்து போனார். 'இரவில் ஒரு பேச்சு, காலை விடிஞ்சா அது போச்சு' என்ற தனி ரகம் அவர்.

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்த பழனிசாமி,  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆகஸ்ட் 21-ஆம் நாள் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்தார்கள். செப்டம்பர் மாதம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. மூன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா  மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க இவர்கள் முயலவில்லை.

ஜெயலலிதா தான் மரணம் அடைந்துவிட்டாரே, அதனால் தானே நமக்கு உயர்பதவிகள்- உல்லாச வாழ்க்கை என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். ஜெயலலிதா படத்தைச் சட்டைப் பாக்கெட்டிலும், மேஜையிலும் வைத்துக் கொண்டு,  அம்மாவின் அரசு என்று மூச்சுக்கு முந்நூறு முறை  சொல்லியே அனைவரையும் ஏமாற்றினால் போதும் என்று எண்ணிவிட்டார்கள். தங்களுக்குப் பதவி கொடுத்து,  அரசியல் வாழ்க்கை பிச்சை போட்ட ஜெயலலிதாவுக்கே துரோகம்  செய்துவிட்டு, இன்று பதவியை நன்றாக அடி முதல் நுனிவரை அனுபவித்து வருகிறார்கள்.

இதோ இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. நாட்டு மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுகிறோம் என்று  இறங்கி இருக்கிறார்கள். ஜெயலலிதா மீது உள்ளார்ந்த அக்கறை, அன்பு, அவர் மீதான மரியாதை இருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து, அதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வாங்கித் தந்திருக்க  வேண்டும். அதைச் செய்துவிட்டு நினைவகம் கட்டியிருக்க வேண்டும். பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதைச் செய்யவில்லை!

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை நடந்தது; கொலை நடந்துள்ளது. அதில் பழனிசாமி மீதே  குற்றம் சாட்டினார் டெல்லி பத்திரிக்கையாளர் மாத்யூ. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்கும் அளவுக்கு தான்,  பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்தது. அந்த சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்குக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியாகி உள்ளார். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் ஒரு நபருக்கு அ.தி.மு.க. தலைமைக்கழகப் பொறுப்பு ஒன்று தரப்பட்டுள்ளது.  நீலகிரிக்குச் சுற்றுப்பயணம் செய்த பழனிசாமியுடன் அந்த நபர் உடன் வந்துள்ளார்.

அந்த நபருக்கு எதிராக நீலகிரி அ.தி.மு.க.வினரே ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள். இப்படி பழனிசாமி - பன்னீர் அண்ட் கோ மீது பல மர்ம ரேகைகள் ஆழமாகப்  படிந்து வருகின்றன. இப்படிப்பட்ட மர்ம ஆசாமிகளுக்கு ஜெயலலிதாவின் நினைவகத்தைத் திறக்கும் அருகதை இருக்கிறதா? 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது.

இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் ஜெயலலிதாவின் நினைவகம் திறக்கப்படுவது அந்த  ஜெயலலிதாவுக்கே செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் - ஜெ. விசுவாசிகள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கிடைத்த பதவியை வைத்து தமிழ்நாட்டைச் சூறையாடிய  பழனிசாமி - பன்னீர்செல்வம் கும்பல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ இருக்கிறது. இதை உணர்ந்த காரணத்தால் டெபாசிட் வாங்கவாவது பயன்படட்டும் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டித் திறப்புவிழா செய்கிறார்கள். இந்தக் கும்பலுக்கு மூடுவிழா நடத்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு  எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற குறட்பாவையும் நினைவூட்டுகிறேன்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்,  கொடநாடு பங்களாவில் நடந்த கொலை -கொள்ளைக்குக் காரணமானவர்கள் என அத்தனை கிரிமினல் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு  இத்தருணத்தில் மீண்டும் வழங்குகிறேன் ” என்றுள்ளார்.

 

Leave a Comment