காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு இளம் காதல் ஜோடி; சாதி மறுப்பு சுய மரியாதை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையைச் சேர்ந்த மாணிக்கம் - பாண்டியம்மாள் தம்பதி, தற்போது அந்தமானில் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் சித்தாரா, கோவையில் தங்கி பட்ட படிப்பு முடித்துவிட்டு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது, தன்னுடன் பணிபுரிந்து வந்த கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மிதுன் என்பவர், சித்தாராவுக்கு அறிமுகமாகி நண்பராக மாறி உள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் இவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். இதனை ஒருவரை ஒருவர் வெளிப்படுத்தியபோது, அவர்களுக்குள் இருந்த நட்பானது, காதல் என்னும் அடுத்த நிலைக்குச் சென்றது. இதனால், ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம், இருவரது பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதனால், இளம் பெண் சித்தாராவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரத்தில், காதலன் மிதுனின் பெற்றோரான ராஜா - ராதிகா தம்பதியினர் மகனின் காதல் திருமணத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அதன் படி, காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திட்டமிட்டபடி, கடந்த 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு, தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த காதல் ஜோடி, மாலை அணிவித்து, இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக மணமகன் மிதுன் கூறும்போது, “முதன் முதலில் கோவையில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போது, வங்கியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாங்கள் பணி புரிந்தபோது எங்களுக்குள் நல்ல அறிமுகம் கிடைத்தது. இதனால், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். தங்களுடைய காதல் விவகாரத்தைப் பெற்றோரிடம் கூறியபோது என்னுடைய வீட்டில் ஏற்றுக்கொண்டனர்.
அத்துடன், நாங்கள் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படியே, பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். சடங்குகள் சம்பிரதாயத்தில் எங்கள் இருவருக்கும் நம்பிக்கை இல்லை.
அதே நேரத்தில், புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லி திருமணம் செய்து கொள்வதில் எங்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை. இதனால், எளிமையான முறையில் தந்தை பெரியார் சிலை முன்பு சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது எங்களுக்கு முழு மன திருப்தியைத் தருகிறது” என்று, கூறினார்.
இதனையடுத்து பேசிய மணமகள் சித்தாரா, “நாங்கள் பெரியாரைப் படிக்க ஆரம்பித்த பிறகு தான், பெரியார் கூறிய முறையில் திருமணம் செய்து கொள்வதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். சாதி மறுப்பு சுய மரியாதை திருமணம் செய்து கொண்டது எங்களுக்கு அவ்வளவு சந்தோசத்தைத் தருகிறது. சாதிய கட்டமைப்பு என்பது, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மனித நேயத்தைப் பாதிக்கும் சாதி எங்களுக்குத் தேவையில்லை.
மனிதநேயம் தான் எங்களுக்கு முக்கியம். சிறு வயதில் சாதியக் கட்டமைப்புக்குள் இருந்த நிலையில், பெரியாரைப் படித்த பின்னர் மனித நேயம் எவ்வளவு முக்கியமானது என்பது புரிந்தது” என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, அந்தமான் இளம் பொண்ணும் - கோவை இளைஞனும் தந்தை பெரியாரின் வழியில் சாதி மறுப்பு சுய மரியாதை திருமணம் செய்து கொண்டது, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.