கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரிக்க முடிவு

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரிக்க முடிவு - Daily news


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்வப்னா சுரேஷின் வங்கி கணக்குகளையும், லாக்கர்களையும் ஆய்வுசெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் ஸ்வப்னா சுரேஷின் தனி லாக்கரை சோதனை செய்ததில் 1 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன எனக்கூறப்பட்டது. அப்படி வெளியான தகவல்களில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் அளித்துள்ளார். இதனால் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் தொடர்புடையதால் விசாரணை தீவரமடைந்தது.

அஜித் தோவல் தலைமையிலான தேசிய புலனாய்வுக் குழு ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சிக்க வைக்க பெரும்பாடுபட்டதாக சொல்லப்பட்டது.

ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரை பரிசோதித்தபோது, அதில் ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு கிலோ தங்கமும் இருந்தது தெரியவந்தது. ஆனால் கடந்த 10 வருடமாக இந்த தொழிலில் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருந்தது என சுங்கத்துறையால் மதிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தங்கங்கள் எல்லாம் ஸ்வப்னா சுரேஷ் மூலமாகத்தான் கடத்தப்பட்டது என சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பைசல் பரீத். ராபின்ஸ் ஹமீத் ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்க கடத்தல் வழக்கில், கேரள முதல்வரின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்ப துறை செயலருமான சிவசங்கரனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ள அமலாக்கத்துறை,   இதுதொடர்பாக, என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.  இம்மனுவை விசாரித்த  நீதிமன்றம், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
 

Leave a Comment