பழைய ஃபார்முக்கு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை ரவுண்ட் கட்டி அடித்து வெற்றிப் பெற்றுள்ளது.
14 வது ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 12 வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில், ருதுராஜ் 10 ரன்னில் வெளியேறினார். பின்னர், ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார் பாப் டு பிளிஸ்சிஸ். இந்த அதிரடி வெகு நேரம் நீடிக்கவில்லை. அவர் 17 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் அடித்திருந்த போது, கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால், சென்னை அணி பவர் பிளே இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களம் இறங்கிய மொயீன் அலி, ஓவருக்கு ஓவர் ஒரு சிக்ஸ் அல்லது ஒரு பவுண்டையாவது அடிப்போம் என்ற கணக்கில் அடித்துக்கொண்டு இருந்தார். மொயீன் அலியும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்சர் என்று 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
இதனையடுத்து களமிறங்கிய சின்னத் தல சுரேஷ் ரெய்னா, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 18 ரன்களை எடுத்து ஆட்டம் இழ்ந்து அதிர்ச்சி அளித்தார். அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு 3 சிக்சர் உட்பட 27 ரன்கள் விளாசி முக்கியமான கட்டத்தில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது, சென்னை அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
200 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்ததால், தோனியும் - ஜடேஜாவும் களம் இருந்த நிலையில், சற்று தடுமாறிப்போனார்கள் இதனால், சென்னை அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. கேப்டன் தோனி தடுமாறியது, இந்த போட்டியிலும் அப்படியே எதிரொலித்தது.
இந்த போட்டியில் 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், இளம் வீரர் சகாரியாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அவர் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாம் கரன் வந்த வேகத்திலேயே சிக்சர் அடித்து மிரட்டினார். மறு முனையில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடிய ஜடேஜா 8 ரன்களில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். அத்துடன், சாம் கரனும், தாக்கூரும் ரன் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
கடைசி நேரத்தில் களம் இறங்கிய ப்ராவோ ஆட்டமிழக்காமல் 8 பந்துகளில் அதிரடியாக விளையாடி 20 ரன்கள் குவித்தார். இதனால், சென்னை அணி 9 விக்கெட் இழந்து, 188 ரன்கள் எடுத்திருந்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான மனன் வோராவும், பட்லரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
மனன் வோரா 14 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டானார். இதனால், மிடில் வரிசையில் ராஜஸ்தானின் பேட்டிங் வரிசையை சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலியும், ரவீந்திர ஜடோஜாவும் அப்படியே சீர்குலைத்தனர். ஆனாலும், அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 49 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் வந்த மற்ற வீரர்கள் யாவரும், சென்னை அணியின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டிமிழந்தனர். குறிப்பாக, கடத்த போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட கிறிஸ் மோரிஸ், இந்த போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால், 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது, இதில், மொயீன் அலி 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முக்கியமாக, அசத்தலாக பீல்டிங் செய்து கலக்கிய ஜடேஜா, 4 கேட்ச் பிடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி தற்போது 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.