இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் முத்த எமோஜி! #WorldEmojiDay
By Madhalai Aron | Galatta | Jul 17, 2020, 12:25 pm
பலருக்கும், தங்களுடைய காதல், கோபம், அழுகை, கவலை எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்த முடியாததால், அவர்களுக்கு உதவியாக இருப்பது எமோஜிக்கள்தான். அதன் அடிப்படையில் பார்த்தால், எமோஜிக்கள் இல்லாமல் எந்த ஓர் உரையாடலும் இருப்பதில்லை. வளர்ந்து வரும் டிஜிட்டல் காலத்துக்கேற்ப ஒவ்வொரு விதமான உணர்வுகளுக்கும், உதாரணமாக, கவலை, சோகம், மகிழ்ச்சி, கோபம் என்று அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்த வித்தியாசமான முகபாவத்துடன் ஆயிரக்கணக்கான எமோஜிகள் உள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டே இருந்தாலும், மனிதனின் உணர்களையும் நேரடியாக இல்லாமல், மறைமுகமான வழியிலும், வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிந்தது சுகிடா குரிடாதான். இவர் தான் மனிதனின் உணர்கள் அனைத்தையும் எமோஜியாக மாற்றி, டிஜிட்டல் உலகத்தில் மனிதனின் உணர்வுகளையும் பதிவேற்றினார்.
எமோஜி முதன்முதலில் ஜப்பானில் வானிலை அறிக்கைகள் வாசிக்கும்போது சின்ன சின்ன கிராபிக்ஸ் மூலம் செய்திகளைச் சொல்லப் பயன்படுத்தி வந்தனர். அதன்பின், முதன்முதலில் 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி எமோஜி காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. எமோஜி காலண்டர் அறிமுகமான நிகழ்வை முன்னிட்டு, ஜூலை 17-ம் தேதி முதல், உலக எமோஜி தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உரையாடலில் முக்கிய இடத்தை பெற்றுள்ள எமோஜிகள், மஞ்சள் நிறத்தில் முகபாவங்களைக் காட்டும் எமோஜிகள், மனிதர்களின் முகபாவத்துடன் கூடிய எமோஜிகள் என பலவும் உள்ளன.
இந்த எமோஜிக்கள் அனைத்தும் 1995-ல் இருந்து மொபைல் இன்டர்நெட் பிளாட்பார்ம்-க்கு வந்தது. அப்போது இருந்த எமோஜிக்களின் எண்ணிக்கை வெறும் 76 தான். 2019-ம் கணக்குப்படி ஃபேஸ்புக்கில் இருக்கும் 7 எமோஜிக்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 6 கோடி. அதேபோல் ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 500 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாகக் காதல், முத்தம், இதயங்கள், அதிக மகிழ்ச்சி, கண்ணடிப்பது, வெட்கம், அழுகை போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் அதிகம் பயன்படுத்தும், டாப் எமோஜிகளுக்கு World Emoji Awards விருதுகளும் கொடுக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 3 எமோஜிகளுக்கு இந்த ஆண்டு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்ற டாப் 3 எமோஜிக்கள்!
ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களில் 2020-ல் ஆண்டு கணக்குப்படி தற்போது 3,136 எமோஜிக்கள் உள்ளன. 2018-ல் 2,789 ஆக இருந்த எமோஜிக்கள், 2019-ல் 3,019 ஆக உருவாக்கப்பட்டது. தற்போது 2020-ல் 117 எமோஜிக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, தற்போதைய கணக்குப்படி, 3,136 எமோஜிக்கள் உள்ளன.
உலகளவில் 2019-ல் மெஸெஞ்சரில் முத்த எமோஜியை அதிகமாகப் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியாவுக்குத்தான். கனடா, தாய்லாந்து, இங்கிலாந்து நாடுகள் இதய எமோஜியும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா சிரிப்பு எமோஜியையும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு மாற்றங்களுடன் புதிய ஸ்கின் டோன் வித்தியாசங்களுடன் புதிது புதிதான எமோஜிக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
முதலில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் மட்டுமே இருந்த எமோஜிக்கள், ஆப்பிள் செல்போன்களிலும் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டன. 2018-ல் ஆப்பிள் நிறுவனம் எமோஜி தினத்தை முன்னிட்டு 70 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தியது. தற்போது கருப்பு, வெள்ளை போன்ற ஸ்கின் டோனில் வித்தியாசங்கள் மற்றும் தலைமுடிகளில் கருப்பு, வெள்ளை, கிரே கலர் கொண்ட மனித உருவங்கள் மற்றும் சுருட்டை முடியுள்ள மனிதர்களின் முகங்கள் எனப் பல புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், பறவைகளை மற்றும் விலங்குகளைக் குறிக்கும் எமோஜிகள் பலவும் அறிமாகியுள்ளன. அதேபோல், பலருக்கும் பிடிக்கும் வகையில் வெவ்வேறு வகையான விளையாட்டுக்களைக் குறிக்கும் வகையிலும் பல எமோஜிக்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது வரை, பலருக்கும் எமோஜி-க்கான அர்த்தம் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், அதன் க்யூட் ரியாக்ஷன் காரணமாகவே அதனைப் பலருக்கும் ஷேர் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் அதிகம் பயன்படுத்தும், உங்களுக்கு மிகவும் பிடித்த எமோஜிக்களை எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!
- பெ.மதலை ஆரோன்