“திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதி மற்றும் அக்டோர் 15 ஆம் தேதிக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்” என்று, மத்திய அரசு 5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத நிலையிலும் பொது மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு தளர்வுகளாக படிப்படியாக மத்திய அரசு அறிவித்து வந்தது. அதன்படி, தற்போது அமலில் இருந்த 4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அனைத்தும் நள்ளிரவோடு முடிவடைந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி, இந்த முறை பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
5 ஆம் கட்ட தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்
- அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு, பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் படிப்படியாகத் திறப்பது குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முடிவு செய்துகொள்ள அனுமதி தரப்பட்டு உள்ளது.
- பெற்றோரின் எழுத்துப்பூர்வமான சம்மதத்தின் பேரில் மட்டுமே மாணவர்கள் பள்ளி வகுப்புகளில் பங்கேற்கலாம். ஆனால், இதற்கு வருகைப் பதிவு கட்டாயம் கிடையாது என்றும், மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
- ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கிற போது பின்பற்ற வேண்டிய சுகாதார, பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள் குறித்து மாநில அரசுகள், தாங்களாகவே செயல்பாட்டு விதி முறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இவற்றைப் பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கல்லூரிகளையும், உயர் கல்வி நிறுவனங்களையும் திறப்பது பற்றி நிலைமைக்கேற்ப உயர் கல்வித்துறை, கல்வித்துறை அமைச்சகம் ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்றும், ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி முறையை மீண்டும் தொடரலாம் என்றும், அவற்றை ஊக்குவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய நீச்சல் குளங்கள் வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய இளைஞர்கள் விவகாரம், விளையாட்டு அமைச்சகம் வழங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
- சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளுடன் அக்டோபர் 15 ஆம் தேதியில் இருந்து திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பொழுது போக்கு பூங்காக்கள் வரும் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்குகிறது.
- அதே போல், மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடு கூடாது என்றும்; அனுமதி, ஒப்புதல், இ பெர்மிட் தேவையில்லை என்றும், மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மத்திய அரசின் இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைகள் பழையபடியே திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.