2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்! சுந்தர் பிச்சை அறிவுறுத்தல்.. காரணம் என்ன தெரியுமா?
By Aruvi | Galatta | Jul 28, 2020, 12:34 pm
2021 ஆண்டு ஜூன் வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக அளவில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. உலக வல்லரசு நாடுகள் எல்லாம் இந்த கொரோனா வைரசை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இதன் காரணமாக, உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெரிய பெரிய நிறுவனங்கள் பலவும், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி அறிவுறுத்தி வருகின்றன. இதனால், பெரிய பெரிய நிறுவனங்கள் முதல் மீடியா வரை பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ( வொர்க் பிரேம் ஹோம்) பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, கூகுள் நிறுவனமும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அவரவர் அலுவலக்திற்கு திரும்ப வேண்டும் என்றும், கூறியது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் குர்கான், மும்பை, ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் கூகுள் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாகக் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பி உள்ள இமெயில் குறிப்பில், “வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை நீட்டித்து உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த அறிவிப்பு உலகில் உள்ள அனைத்து கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்களுக்கும் பொருந்தும்” என்றும், சுந்தர் பிச்சை கூறி உள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்பு விகிதத்தைப் பொறுத்து அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும்” கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பானது இந்த ஆண்டின் இறுதி வரையிலோ அல்லது அடுத்த ஆண்டு வெயில் காலம் தொடங்கும் வரையிலோ இருக்கலாம் என்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருந்தன. இதன் காரணமாகக் கூட, கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி இருக்கலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.